1956 - மொழிவழி மாநிலம் அமைத்தல், மெட்ராஸ் மாநிலம் என்பதற்குத் தமிழ்நாடு என்று பெயரிடல் உள்ளிட்ட 12 கோரிக்கைகளுடன், விருதுநகரின் சூலக்கரை மேட்டில், சங்கரலிங்கனார் தனியாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இவரும் காரமராஜரும் ஒரே (விருதுநகர் ஞானாதிநாத நாயனார்) பள்ளியில் படித்தவர்கள். பள்ளியில் இவர் காமராஜருக்கு 7 வருடங்கள் 'சீனியர்'! வ.உ.சி.யின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போரில் குதித்தவர் இவர். அதன் ஒரு பகுதியாகக் கதர் விற்பனையில் இவர் காட்டிய வேகத்திற்கு, சுதேசமித்திரன் பாராட்டுச் செய்தியே தனியாக வெளியிட்டது.
இந்த 12 கோரிக்கைகளிலும்கூட, அரசியல்வாதிகள் எளிமையாக இருக்கவேண்டும் என்றும், அரசுப் பணியில் உள்ள அனைவரும் கதர் மட்டுமே அணியவேண்டும் என்றும் கோரிக்கைகளை அவர் வைத்திருந்தார். மகளிருக்குக் கல்வியளிக்கும் நோக்கத்துடன், 1914இல் விருதுநகரில் தொடங்கப்பட்ட 'பங்கஜ விலாச வித்தியாபிவிருத்திச் சங்கம்' என்ற அமைப்பிற்குச் செயலாளராக ஆகுமளவுக்கு, மகளிர் கல்வியில் அக்கறை கொண்டிருந்தார். விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு, தனது இரு வீடுகள், சேமிப்பு ரூ.4,000 ஆகியவற்றை 1952இல் வழங்கிய சங்கரலிங்கனார், அதிலிருந்து வரும் வட்டியில் மதிய உணவாகக் கஞ்சி வழங்க வழிசெய்தார். மதிய உணவுத்திட்டம் தொடங்க காமராசருக்கு இதுவும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. 1952 டிசம்பரில், ஆந்திர மாநிலக் கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருந்து பொட்டி ஸ்ரீராமுலு உயிர் துறக்க, அடுத்த 3 நாட்களில் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அதைப் போன்றே தமிழ்நாடு கோரிக்கையை வென்றெடுக்க உண்ணாவிரதத்தை சங்கரலிங்கனார் தொடங்கிய இடம் ஆள்நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், (அன்றைய ஒன்றுபட்ட) கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளின்படி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், கோரிக்கையை காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. உடல்நிலை மோசமடைந்ததால் ஜீவா, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டினாலும் அவர் ஏற்கவில்லை. 76 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப்பின், உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்டோபர் 10இல் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, 13இல் உயிரிழந்தார். அவ்வாண்டு நவம்பர் 1இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், தமிழ்நாடு பெயர் கோரிக்கை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை ஏற்கப்படவில்லை. அண்ணா முதல்வரானபின் 1968இல் தீர்மானமும், சட்டமும் நிறைவேற்றப்பட்டு, 1969இன் பொங்கலன்று நடைமுறைக்கு வந்தது.
===அறிவுக்கடல்===