tamilnadu

img

கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை (CSR) உண்மையான சமூக பொறுப்புணர்வுடன் பயன்படுத்த...

கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை (CSR) உண்மையான சமூக பொறுப்புணர்வுடன் பயன்படுத்த...

கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வை சட்டப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் மற்றும் முந்தைய மூன்று ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பெருநிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் 2 சதவிகிதத்தை சமூக நல நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

அந்தந்த நிறுவனங்களே சமூக பொறுப்பு எது என தீர்மானித்து அத்தகைய பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கோ அல்லது தாங்களே அந்தப் பணிகளைச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அச்சட்டம். இது நிறைவேற்றப்படுவதில் உள்ள பிரச்சினைகள், தேர்ந்தெடுக்கப்படும் துறைகள், செலவழிக்கப்படும் முறைகள் குறித்து பல விமர்சனங்கள் உள்ளன.

பல நிறுவனங்கள் அதை செலவு செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு. சேவைகளுக்கு செலவு செய்வதை விட அதை விளம்பரப்படுத்துவதற்கு கூடுதலாக செலவு செய்கிறார்கள் என்கிற விமர்சனமும் உண்டு. தங்களுக்குத் தாங்களே செலவு செய்கிறார்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கு செலவழிக்கிற நிறுவனங்கள், இதுவரையிலும் செலவிடாத நிறுவனங்கள், சட்டப்பட்டி செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் தாமாக முன்வந்து செலவழிக்கும் நிறுவனங்கள் என இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையிலிருந்து ஒரு குறிப்பிட்ட துறை மீண்டுவர உதவினால் சமூக பொறுப்புணர்வோடு இது செலவழிக்கப்பட்டதாக இருக்கும். தொலைநோக்கில் தமிழகத்திற்கு ஒரு மிகச் சிறந்த கட்டமைப்பைக் கொடுத்ததாகவும் இருக்கும்.

தமிழகத்தில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா தலைமை மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனைகள், சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள் என ஒழுங்கமைக்கப்பட்ட, கீழிருந்து மேல் வரிசைப்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.

நவீன தாராளமயக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு இந்தக் கட்டமைப்புகள் போதுமான கவனிப்பின்றியும், சீர்குலைக்கப்படும் வகையிலும் நிதி ஆதாரங்கள் வெட்டப்பட்டன. இது தமிழகத்துக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. ஆயினும், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டியமைக்கப்பட்ட இந்த மருத்துவக் கட்டமைப்பு தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறது. ஆயினும், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது இதிலுள்ள பலவீனங்கள் வெளிப்பட்டன. இத்தனைக்கும் மத்தியில் தமிழகத்தில் செலவழிக்க வாய்ப்பற்ற மக்களையும் கீழ் நடுத்தர, நடுத்தர பிரிவினர்களில் பலர் என லட்சக் கணக்கான மக்களை உயிர் பிழைத்திருக்க வைத்தது இந்தக் கட்டமைப்புதான்.

அநேகமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் (எங்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன் இருக்கிறதோ அங்கெல்லாம்) எம்ஆர்ஐ ஸ்கேன் எந்திரம் தனியார் கையில்தான் உள்ளது. அதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. மருத்துவமனைகளிலுள்ள சிடி ஸ்கேன் பெரும்பாலான இடங்களில் தினக்கூலிகளால்தான் இயக்கப்படுகிறது. இத்தனைக்கும் போதுமான அளவிற்கு படிப்பும், அனுபவமும் மிக்கவர்களே இதை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பல மருத்துவமனைகளில் கழிப்பறை வசதிகள், தண்ணீர் வசதி, நோயாளிகளின் உதவியாளர்கள் உணவு அருந்துவதற்கான ஏற்பாடு, நோயாளிகளுடன் தங்க வாய்ப்பில்லாதவர்கள் இரவு நேரங்களில் உறங்குவதற்கும், பகல் நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும், குளிப்பது உள்ளிட்ட கடன்களை செய்வதற்கும் உரிய ஏற்பாடுகள் இல்லை.

இதேபோன்று ஆக்சிஜன் சேமித்து வைப்பதற்கும் வசதி இல்லாத மருத்துவமனைகளும் இருக்கின்றன. படுக்கை பற்றாக்குறை, விரிப்புகள் பற்றாக்குறை என பற்றாக்குறைகள் நீள்கிறது. ஆனால், இவை எல்லாம் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சிறப்பாகவே இருக்கின்றன என்று சொல்ல முடியும்.

பல நாடுகளில் மருத்துவத்திற்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் வரை ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஒதுக்கும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் அளவிற்கே இருக்கிறது. ஒன்றிய அரசே கூட 2025ம் ஆண்டு வாக்கில்தான் 2.25 சதவிகிதமாக உயர்த்தப் போவதாக இலக்கு நிச்சயித்திருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது.

நிச்சயிக்கப்பட்ட இலக்கிற்கு தகுந்தாற்போல் நிதி ஒதுக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவன மருந்துக் கம்பெனிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், மிகப் பெரும் தொழிலாக வியாபித்திருக்கும் மருத்துவ ஆய்வுக் கூடங்கள் இதை அனுமதிக்க தடை விதிப்பார்கள்.

இந்நிலையில் மாநில அரசு தனக்குள்ள நிதியாதாரத்தைக் கொண்டு மிகப் பெரிய மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது. தன்னளவில் வரி விதிப்பதற்கான அதிகாரம் எதுவும் மாநில அரசின் கையில் இல்லை. கடன் வாங்குவதிலும் கூட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தனியார்மயமாக்கல், கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளும் ஒன்றிய அரசால் விதிக்கப்படுகின்றன. எனவே, கையையும் காலையும் கம்பி கொண்டு கட்டி கடலில் தூக்கி எறிந்துவிட்டு கரையேறி வா என்று மாநிலங்களுக்கு சவால் விடும் நிலையில்தான் ஒன்றிய அரசின் நிதிக் கொள்கையும் இதர கொள்கை முடிவுகளும் இருந்து கொண்டிருக்கின்றன.

பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மையே. தனியார் நிறுவனங்கள் பலவும் கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசுக்கு பல அரசு சாரா அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் ஏராளமாக உதவியிருக்கிறார்கள் என்பதும் புறக்கணிக்க முடியாத உண்மை. பாராட்டப்பட வேண்டிய செயல். பெருநிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களின் இந்த உணர்வு பாராட்டத்தக்கது. ஊக்குவிக்கப்பட வேண்டியது.

தமிழக அரசு இந்த உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதியை ஒதுக்கும் நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள தொழில் கூட்டமைப்புகள் ஆகியவற்றோடும் தமிழகத்தில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளோடும் ஒரு உரையாடலை துவக்குவது நல்லது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி முழுவதையும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செலவிட வேண்டுமென்று நிறுவனங்களைக் கோரலாம்.

நிறுவனங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு ஓரளவு நிதி ஒதுக்க வேண்டியது இருக்கலாம். அதுபோன்ற ஒதுக்கீடுகளைத் தவிர இதர அனைத்து நிதி வளத்தையும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமென்று அரசு முன்முயற்சி எடுத்தால் அந்த உதவிகளை மொத்தமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதைப் பயன்படுத்திக் கொள்வது தவிர சில நிறுவனங்கள் கட்டிடங்களோ, எந்திரங்களோ கொடுத்து உதவ முன்வருவார்களே என்றால் உரிய முறையில் அவர்களை கவுரவிப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு முன்வைக்கலாம். இதை செய்யும்போதே தமிழகத்தின் வசதியுள்ள பிரிவினர் இந்த உன்னதமான நோக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு முன்வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 5 ஆண்டுகளில் கிடைக்கும் நிதியைக் கொண்டு தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டிய பணிகள், அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை முன்வைத்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது, தமிழகத்தின் மனிதவளக் குறியீடு குறிப்பாக கிராமப்புற மக்களின் மனிதவளக் குறியீடு மேம்படுவதற்கு முக்கியமான பங்களிப்பைச் செய்யும்.

தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் முன்முயற்சி எடுப்பதும், ஊடகங்கள் இந்த உரையாடலில் நேர்மறையான பங்களிப்பைச் செலுத்துவதும், ஈடுபாடு உள்ள அதிகாரிகள் இதிலுள்ள சாத்தியப்பாடுகள் குறித்த உரிய ஆவணங்களையும் முன்மொழிவுகளையும் தயார் செய்வதும், தமிழக சுகாதார கட்டமைப்பில் ஒரு சிறிய, உறுதியான முன்னேற்றத்தை உருவாக்க உதவும்.

M. K. Stalin Ma Subramanian Thangam Thenarasu @ptr palanivel thiyagarajan