சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அரசு பதில்
புதுதில்லி, மார்ச் 6- மத்திய அரசு எத்தனை புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது: ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள புதிய மருத்துவமனைகளின் பணிகளின் தற்பொழுதைய நிலைமைகள் என்ன என்ற கேள்விகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 மருத்துவமனைகள் இயங்கி வரு கின்றன என்று கூறியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கூறும் பொழுது, ரூ.1264 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் முதலீட்டிற்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியினை ஜேஐசிஏ மூலம் பெறுவதற்கான நிகழ்முறை துவக்கப்பட்டுள் ளது. இந்திய அரசு மற்றும் ஜப்பான் அரசு ஆகியவற்றின் ஒப்புதலுடன் கடன் நிதி பெறுவதற்கான ஒப்பந்தம் உத்தேசமாக செப்டம்பர் 2020 ல் கையெழுத்திடப்படலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைப்பதற்கான பணிகள் அனைத்தும் செப்டம்பர் 2022 க்குள் முடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரி வித்துள்ளது.