புதுதில்லி, ஏப்.23- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் ரூ.1.5 கோடி அளிப்பதாக தன்னை ஒருவர் அணுகியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ள உத்சய் பெயின்ஸ் கடந்த 20 ஆம் தேதிதனது முகநூல் பக்கத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாகச் சிலர் தன்னை அணுகிய தாகவும், ஆனால் அதைச் செய்ய தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், சில தினங்களுக்கு முன் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் என்னைச்சந்திக்க வந்தார். இந்திய பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தலைமை நீதிபதி மீது பொய்யான பாலியல் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ரூ.1.5 கோடி பணம் கொடுக்கிறோம் என்றனர். ஆனால் இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகமாக இருந்தது. அதனால் இதை மறுத்துவிட்டேன். உடனே பணத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் வெளியே சென்றுவிட்டார்கள். இது தலைமை நீதிபதியை ராஜினாமா செய்ய வைப்பதற்கான முயற்சி என்ற நம்பத் தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்தன. இதுகுறித்த உண்மையைப் பேச வேண்டும். அதற்காக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.இதைத்தொடர்ந்து ஏப்ரல் 22 அன்று உத்சய் பெயின்ஸ் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்றம் தாமாக முன்வந்து சிறப்பு அமர்வு ஒன்றை அமைத்தது.அந்த அமர்வின் விசாரணை செவ்வாயன்று மீண்டும் நடந்தது. அரசியல் சாசன சிறப்புஅமர்வின் விசாரணையிலிருந்து இன்று முதல் ஒருவார காலத்துக்கு தலைமை நீதிபதிரஞ்சன் கோகோய் விலகியுள்ளதால், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிந்தன் நரிமண் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.ரஞ்சன் கோகோய் மீது பொய்யான புகார்அளித்தால் பணம் தருவதாகத் தன்னை அணுகியதாக வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ்பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு நீதிபதிகள் செவ்வாயன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதற்கான ஆதாரங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.