திருச்சூர்:
மோடி அரசு அமல்படுத்தும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலால் ஏற்றத்தாழ்வு நீ்ங்காது மேலும் அதிகரிக்கவே செய்யும் என பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறினார்.
கேரள மாநிலம் திருச்சூரில் வெள்ளியன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கில் ‘சமகால இந்தியாவின் ஜனநாயகம். சத்துவம். பாலினம். சாதி’ என்கிற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: மூலதன சக்திகளும் வகுப்புவாத பாசிசமும் இந்தியாவில் ஒன்றாக கரம்கோர்த்துள்ளன. மக்களை பொருளாதார ரீதியில் சுரண்டுவதும் சாதியமாக மோத விடுவதுமே இருவரது நோக்கம். ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டுமெனில் பணக்காரர்களிடமிருந்து கூடுதல் வரிவசூல் செய்து மக்கள் நலனுக்காக வழங்கிட வேண்டும். நாட்டில் பெரும் பணக்காரர்களின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். கோடீஸ்வரர்களின் வாரிசுகளிடம் அபரிமிதமான சொத்துக்கள் குவிகின்றன. அவர்களிடமிருந்து கூடுதல் வருவாய்க்கான வரி வசூலிக்க வேண்டும்.
அனைவருக்கும் இலவச கல்வி. வேலைவாய்ப்பு. மருத்துவம். ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க வேண்டும். வேளாண் வளர்ச்சியின் ஊடாக பொருளாதார நெருக்கடியை கடக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். வேளாண் வளர்ச்சிக்கு மானியங்கள் வழங்க வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையும் வங்கி கடன்களும் வழங்க வேண்டும். இவற்றை கார்ப்பரேட்டுகள் அனுமதிக்கமாட்டார்கள்.
பாஜகவின் 2019க்கான பொருளாதார நிகழ்ச்சி நிரல் மிகவும் ஆபத்தாக உள்ளது. உயர் துறைகளில் வகுப்புவாத வன்கொடுமைகளும் அவநம்பிக்கையும் திணிக்கப்படுகின்றன. மதத்தின் பெயரால் மக்களை மோத விடுகிறார்கள். பாசிச அடையாளம் ஓட்டுக்காக சாதியைக் கூறி விலைபேசும் போக்கு போன்றவற்றுடன் இணங்கிச்செல்ல முடியாது. சாதியின் பெயரில் அணிதிரள்வது வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வல்ல. தொழிலாளி – விவசாயிகள் என அடித்தட்டில் உள்ள மக்களின் வர்க்க ஒற்றுமை வளர வேண்டும் என பிரபாத் பட்நாயக் கூறினார்.