புதுதில்லி:
மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்டு வந்த, முக்கியமான ஆங்கில நாளிதழ்களுக்கு வழங்கப்பட்டு வந்த விளம்பரங்களை, அடியோடு நிறுத்தி, மோடி அரசு பழிவாங்கியுள்ளது.
2014-ஆம் ஆண்டு, மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதலே, ஊடகங்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கி விட்டன. இதற்கு எதிராக அவ்வப்போது கண்டனங்கள் எழுந்தாலும் மோடி அரசு அவற்றைக் கண்டுகொள்வது இல்லை.
இந்நிலையில்தான், இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகைகள் மற்றும் சில ஆங்கில செய்தி சேனல்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மத்திய அரசு விளம்பரங்கள்அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சென்னையிலிருந்து வெளி வரும் ‘தி ஹிந்து’, மும்பையை மையமாக கொண்டுவெளிவரும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’,‘எகனாமிக் டைம்ஸ்’, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘தி டெலிகிராப்’ ஆகியவை இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ்களாகும். இவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த விளம்பரங்கள்தான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
’தி ஹிந்து’, ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’,‘தி டெலிகிராப்’ மற்றும் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ ஆகிய நான்கு முன்னணி ஆங்கிலநாளிதழ்களை மாதந்தோறும் 2 கோடியே 60 லட்சம் வாசகர்கள் படிக்கின்றனர். ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமத்துக்கு மாதந்தோறும் 15 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு மாதந்தோறும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.இதுதவிர ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமத்துக்கு சொந்தமான ‘டைம்ஸ் நவ்’ மற்றும் ‘மிரர் நவ்’ ஆகிய ஆங்கில செய்திச் சேனல்களுக்கான மத்திய அரசுவிளம்பரங்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
இதில் ‘தி ஹிந்து’வுக்கு கொடுக்கப்பட்டு வந்த மத்திய அரசு விளம்பரங்கள் தேர்தல்களுக்கு முன்பே, அதாவது கடந்த மார்ச் மாதமே நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்களுக்கான விளம்பரங்கள் மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர் நிறுத்திப்பட்டிருக்கின்றன.இதுதொடர்பாக, சர்வதேச செய்தி நிறுவனமான ‘ராய்டர்ஸ்’ (Reuters) வெளியிட்டிருக்கிறது. ‘ராய்டர்ஸ்’ நிறுவனத்தின் இந்த செய்தியை மேற்கோள்காட்டி ‘திஒயர்’ (thewire.in) இணையதள இதழும் விரிவான கட்டுரையை பிரசுரித்திருக்கிறது. விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம், நடந்து முடிந்த தேர்தல்களின் போது பாஜக-வுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டதுதான் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, ‘தி ஹிந்து’ நாளிதழைப் பொறுத்தவரை, “பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கும் விவகாரத்தில் ‘தி ஹிந்து’வில் வெளிவந்த ஆழமான கட்டுரைகள் தான் மத்திய அரசு விளம்பரங்களை நிறுத்துவதற்கு காரணம்” என்று கூறப்படுகிறது.இதனைக் குறிப்பிட்டு, 1987-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின்அரசுக்கு எதிராக போபர்ஸ் பீரங்கி ஊழல்பற்றி எழுதியபோது கூட எங்களுக்கானமத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதில்லை என்று கூறியிருக்கிறார், ‘தி ஹிந்து’பத்திரிகையின் பெயர் குறிப்பிட விரும்பாதஅதிகாரி ஒருவர். இதனிடையே, இந்தியாவின் அனைத்து முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்,சமூக வலைதங்கள் ஆகியவற்றில் பாஜக மற்றும் மோடி பற்றி வரும் விமர்சனங்களை கண்காணிப்பதற்காகவே மிகப்பெரிய அலுவலகம் ஒன்று பாஜக-வால் தில்லியில் நடத்தப்படுவதாக ‘தி ஒயர்’ இணையதளக் கட்டுரை தெரிவித்துள்ளது.இந்த அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். நாள்தோறும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வெளிவரும் அச்சு மற்றும்காட்சி ஊடகங்களில் பாஜக, மத்திய அரசு, மோடி ஆகியோர் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டுவதுதான் இங்கு பணியாற்றுபவர்களின் வேலை என்று கூறும் அந்த கட்டுரை, விரைவில் இங்கு பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 200-லிருந்து 500 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.