புதுதில்லி, ஏப்.16- இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல்,லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பியோடியது மட்டுமே தொடர்ந்து விவாதமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில்மட்டும், 36 பெருமுதலாளிகளை மோடி அரசு, வெளிநாட்டுக்குத் தப்பவிட்டிருப் பதை, அமலாக்கத்துறை அறிக்கை காட்டிக் கொடுத்துள்ளது.ஹெலிகாப்டர் பேர ஊழல்வழக்கில் கைதாகியிருக்கும், ஆயுதத் தளவாட தரகரான சூசன் மோகன் குப்தா, தனக்கு ஜாமீன் கேட்டு, தில்லி தனிநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். சமூகத்தில் மதிப்புடன் இருக்கக்கூடிய நான் தப்பியோட மாட்டேன் என்றும்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், “விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி,மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங்பயோடெக் நிறுவனத்தின் நிதின் சந்தேசரா சகோதரர்கள் உள்ளிட்டவர்களும், சமூகத்துடன் பின்னிப் பிணைந்தவர்களாகத்தான் இருந்தனர்; இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்” என்று குறிப் பிட்டுள்ளனர்.மேலும், “கடந்த ஓரிருஆண்டுகளில், சமூக மதிப்புபெற்ற 36 பெருமுதலாளிகள், வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர்” என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.