tamilnadu

img

முப்பதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்

சென்னை மாகாண தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் தோற்றம்

1930ஆம் ஆண்டுகளில் தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேரூன்றியது. இந்த இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர்களில் முக்கியமானவர்கள் தோழர் அமீர் ஹைதர்கான், தோழர் சுந்தரய்யா ஆகியோர் ஆவர். இவர்களுடைய நடவடிக்கைகள் பற்றிய விபரங்களைச் சேகரித்து, இவர்கள் மீதும் இவர்கள் உருவாக்கி வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதும் தாக்குதல் தொடுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த விபரங்களையெல்லாம் அரசு ஆவணக் காப்பகத்தில் வைத்துள்ளனர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றியது சம்பந்தமாகவும், தொழிற்சங்க இயக்கம் உருவானது தொடர்பாகவும் அரசு ஆவணக் காப்பகத்திலிருந்து கிடைத்த விபரங்களை அப்படியே கீழே தருகிறோம். இந்த ஆவணத்தில் பி.சுந்தரராமரெட்டி என்று அழைக்கப்படுபவர் நமது மறைந்த தோழர் சுந்தரய்யாதான்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் குறிக்கோள், திட்டத்திற்கு இயைந்தாற்போல் செயல்படக்கூடிய இளம்தொழிலாளர் சங்கம் (லீக்) என்றொரு ஸ்தாபனத்தை அமீர் ஹைதர்கான் 1932ஆம் ஆண்டு சென்னையில் ஸ்தாபித்தார். மாஸ்கோவில் பயிற்சி பெற்ற போல்ஷ்விக் பிரச்சாரகர்களில் ஒருவரான அமீர் ஹைதர்கான் மீரட் சதி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி சென்னையில் ஒளிந்து கொண்டிருந்த போது இந்த ஸ்தாபனத்தை அமைத்தார்.

 1932ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு இந்த ஸ்தாபனம் செயல்படவில்லை. 1934ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமீர் ஹைதர்கான் விடுதலையாகும் வரை இது செயலின்றி இருந்தது. இவர் விடுதலை செய்யப்பட்டதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாகாண கமிட்டியை அமைப்பதற்கு முயற்சித்தார். இவர் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கு முன்னர் வரம்பிற்குட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது. 1934ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் கிளைகளும் சட்டவிரோத ஸ்தாபனங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இளம்தொழிலாளர் லீக்கும் செப்டம்பர் மாதத்தில் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இதன் உறுப்பினர்களால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆணைகளைப் பெறவும், அதன் உத்தரவுகளை அமல் நடத்தவும் முடிந்தது. இதன் அடிப்படையில் சென்னை, நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்ட மாகாணக் கமிட்டி அமைக்கப்பட்டது. மாகாணக் கமிட்டி செயலாளர் பி.சுந்தரய்யா ராமரெட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதன் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து நிதியும், ஆலோசனைகளையும் பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இவர் கொண்டுள்ள உறவை வெளிப்படுத்தக்கூடிய எந்தவொரு தஸ்தாவேஜையும் இவர் வைத்துக் கொள்ளவில்லை.

இளம்தொழிலாளர் லீக் என்ற பெயரில் மேற்கொண்டு வெளிப்படையாக செயல்பட முடியாததால் தங்களுடைய சட்டவிரோத தலைமறைவு வேலைகளை மூடிமறைக்க தீங்கற்ற அமைப்பு என்று காட்டக்கூடிய வகையில் “தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்” என்ற பெயரில் அமைத்தனர். முதல் சங்கம் 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் குண்டூரில் ஆரம்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லூர், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் 1935 ஜூலை முதல் தேதியில் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1935 ஜூலை 19ஆம்தேதி சென்னையிலும், 1935 ஆகஸ்ட் மாதம் தெனாலியிலும் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சங்கங்களின் வேலைகளை ஒருங்கிணைக்க “சென்னை தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்” என்ற பெயரில் மாகாண சங்கம் 1935 ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் இருந்தது.

இந்த சங்கங்களின் குறிக்கோள், இருக்கக்கூடிய தொழிலாளர் பாதுகாப்பு சங்கங்களை ஒருங்கிணைப்பது; இல்லாத இடங்களில் புதிய சங்கங்களை ஆரம்பிப்பது என்பதாகும். இதன் உறுப்பினர்கள், தொழிலாளர் நலன்களுக்கு எதிராக செயல்படக்கூடிய எந்தவொரு வகுப்புவாத ஸ்தாபனத்திலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தச் சங்கங்களுக்கு பி.சுந்தரராமரெட்டி பொதுச் செயலாளராகவும், ஜெ.ராமலிங்கய்யா, பி.ராமசுப்பையா, பி.நரசிம்மமூர்த்தி, சி.ஜெகநாதன், பி.வெங்கடேஸ்வரலு, கரப்பாடி சத்தியநாராயணா, தாடி அப்பலசுவாமி, கே.சத்தியநாராயணா, டி.வெங்கடாசலபதி, பி.வி.சிவய்யா ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

... தொடரும்