புதுதில்லி:
சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்ற போது, பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்களே, மத்திய அரசை விமர்சித்துப் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு பேசியவர்களில் பாஜக-வின் மதுரா தொகுதி எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஹேமமாலினியும் ஒருவராவார். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் தனது தொகுதியை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி, பாஜகவினரை அவர் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
“எனது மதுரா தொகுதியில் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல பகுதிகள் உள்ளன. ஆனால் அந்த பகுதிகளை சுற்றுலாதலங்களாக மேம்படுத்த போதிய அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில், என் தொகுதியில் சுற்றுலா மேம்பட பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை. மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம், பர்சனா, நந்தகான் பகுதிகளில் சுற்றுலா மேம்பட குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. மேற்கொண்டு இதுபற்றிவிரிவாகப் பேசுவதற்கே எனக்குத் தயக்கமாக உள்ளது” என்று ஹேமமாலினி பேசியுள்ளார்.
ஹேமமாலினியைத் தொடர்ந்து பீகார் மாநிலம் சரண் தொகுதியில் இருந்து தேர்வான பாஜக எம்.பி. ராஜீவ்பிரதாப் ரூடியும், மத்திய பாஜக அரசு மீதுஅதிருப்தி தெரிவித்து பேசியுள்ளார்.“கடந்த 5 ஆண்டுகளில் 8 மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ. 500 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் எனது மாநிலமான பீகாருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் என் தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல திட்டபரிந்துரைகளை நான் அரசிடம் கொடுத்தேன். ஆனால் அவையெல்லாம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அந்ததிட்ட பரிந்துரைகள் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும்தெரியவில்லை” என்று ரூடி குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு ஹேமமாலினியும், பிரதாப் ரூடியும் சொந்தக் கட்சியின் ஆட்சியையே விமர்சித்துப் பேசியதை, காங்கிரஸ் எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்க, பாஜக எம்.பி.க்கள் மத்தியிலோ பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.