புதுச்சேரி, ஜூன் 11- புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் செவ்வாய்கிழமை (ஜூன்11) காலை 10 மணிக்கு அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள ஆலத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
மு.க. ஸ்டாலின்
ஜானகிராமனின் இறுதி நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் புதுச்சேரியிலிருந்து எடுத்துவரப்பட்ட ஜானகிராமன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதும் காவல்துறையின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.