tamilnadu

img

கீழடி அகழாய்வு 5-ஆம் கட்டப்பணி இன்றுடன் நிறைவு

கீழடி:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணிகள் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெறுகிறது. ஐந்தாம் கட்டப் பணி ரூ.45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. நான்காம் கட்டப்பணிகள் வரை பெரிய அளவிற்குபிரபலமாகாத கீழடி, ஐந்தாம் கட்ட ஆய்வின் போது பிரபலமானது. மூன்று ஹாக்கி மைதானம் அளவிற்கு தொழிற்சாலை இருந்திருக்கலாம். பன்றியின் உருவம் பொறித்தசூது பவளம், நெசவுத் தொழிலுக்கு பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் எலும்பின்முனை, ஒரு செ.மீ., உயரம் கொண்ட சுடுமணலால் செய்யப்பட்ட குடுவை, பெண்கள் கழுத்தில் அணியும் பாசிகள் உட்படபல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு பெறும் தருவாயில் கீழடியைச் சேர்ந்த கதிரேசன் என்ற விவசாயி தமது நிலத்தில் கல்திட்டை ஒன்று உள்ளதாக தொல்லியல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அது ஆறாம்கட்ட அகழாய்வின் போது முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணியில் குழிகள் தோண்டுவது, கண்டறியப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பது, மழை பெய்தால் குழிகளை சாக்குகள் கொண்டு மூடிவைப்பது உள்ளிட்ட பணிகளை நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள் மேற்கொண்டனர். தமிழக தொல்லியல்துறைக்கு உதவிடும் வகையில் தொல்லியல்துறை  மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுகண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தினர். கீழடி கிராமமக்கள், பள்ளிச்சந்தை, பள்ளிச்சந்தை புதூர் கிராமமக்களும் ஆய்விற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.ஐந்தாம் கட்ட அகழாய்வை அமைச்சர் க.பாண்டியராஜன், தொல்லியல்துறை இயக்குநர் த.உதயச்சந்திரன் ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு ஊக்கப்படுத்தினர். தமிழ்நாடு முற்போக்கு எத்தாளர்-கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள், திமுகதலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுகபொதுச் செயலாளர்  வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பார்வையிட்டு அருங்காட்சியகம் அமைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணியை கடந்த 15 தினங்களில் பல்வேறு கல்லூரி-பள்ளி மாணவ-மாணவிகள் பார்த்துச் சென்றுள்ளனர்.

ஆறாம் கட்ட அகழ்வாய்வு ஜனவரியில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கீழடி தவிர்த்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்த மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டுள்ளது,ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கும்போது பார்வையிட வரும் மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும்.-நமது நிருபர்