tamilnadu

img

டெல்க் நஷ்ட சகாப்தம் யுடிஎப் ஆட்சியின் பழங்கதை..... தொடர்ந்து லாபம் ஈட்டி எல்டிஎப் ஆட்சியில் சாதனை

திருவனந்தபுரம்:
கேரள அரசின் பொதுத்துறை நிறுவனமான டிரான்ஸ்பார்மர்ஸ் அன்ட் எலக்ட்ரிக்கல்ஸ் கேரளா லிட் (TELK) தொடர்ந்து நான்காவது ஆண்டிலும் லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய யுடிஎப்ஆட்சியின் நஷ்ட சகாப்தத்தை பழங்கதையாக்கி ரூ.8.4 கோடி லாபம் ஈட்டி சாதனை படைக்க எல்டிஎப் அரசு வழிவகுத்துள்ளது. 

2019-20 நிதி ஆண்டு ரூ.203.9 கோடிவிற்றுவரவு செய்து கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத பாய்ச்சல் வேகத்தை டெல்க் நிறுவனம் காட்டியுள்ளது. யுடிஎப்ஆட்சியின் இறுதி காலமான 2015-16 நிதிஆண்டில் ரூ.14.79 கோடி நஷ்டத்துடன் நலிவடையும் நிலைக்கு சென்றது. எல்டிஎப் அரசு பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே (2016-17 நிதி ஆண்டு) நஷ்டத்தை ஈடுகட்டி ரூ.1.06 கோடி லாபம் ஈட்டியது. 2017-18இல் ரூ.6.57 கோடியாகவும், 2018-19இல் ரூ.7.99 கோடியாகவும், 2019-2020இல் ரூ.8.4 கோடியாகவும் லாபம் தொடர்ந்து அதிகரித்தது. பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க கேரள அரசு அமல்படுத்தியகொள்கைகள் டெல்க் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுக்க உதவியது. மேம்பாட்டு நடவடிக்கைகளும் புதிய தொழில்நுட்பங்களின் பயன் பாடும் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பல்நோக்கு நீர்ப்பாசன திட்டமான தெலுங்கானாவின் காலேஸ்வரம் திட்டத்திற்காக டெல்க் 400 மற்றும் 220 கிலோவாட் திறன் கொண்ட 71 பெரிய மின்மாற்றிகளை உருவாக்கி வழங்கியுள்ளது. இதுரூ.384 கோடி மதிப்புள்ள பணியாகும். கேஎஸ்இபி-யிடமிருந்து ரூ .250 கோடிக்கான பணி உத்தரவு கிடைத்துள்ளது. 

தற்போது, மாநில மின்வாரியம் மற்றும் பிற மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சார விநியோகத்துக் கான மின்மாற்றிகளை டெல்க் உற்பத்திசெய்து வழங்கி வருகிறது. கடந்தபட்ஜெட்டில், கேரள அரசு இந்நிறுவனத்திற்கு ரூ .10 கோடி ஒதுக்கீடு செய்தது. டெல்க்கில் பல வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. வி.பி.டி ஆலைநிறுவல் இறுதி கட்டத்தில் உள்ளது. 50 ஆண்டு பழமையான ஆலை மற்றும் உபகரணங்களை மாற்றுவதன் மூலம் அதிநவீன ஆலை அமைத்தல் நடந்து வருகிறது. மேலும் 180 டன் எடை தூக்கும் கிரேன்களின் திறனை 250 டன் வரை அதிகரிக்கவும் சோலார் இன்வெர்ட்டர்கள் தயாரிக்கும் ஆலையை மேம்படுத்தல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.