tamilnadu

img

ரபேல் தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ரபேல் தொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரி மத்திய அரசு மனு அளித்ததைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை மே மாதம் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரபேல் ரக போர் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அளிப்பது எனவும், ஒரு விமானத்தின் விலை சுமார் 526 கோடி எனவும், விமானத்தை இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாகவும் கையெழுத்தாகி இருந்தது.


ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தத்தை முற்றிலுமாக மாற்றியது. அதன்படி, போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அளிக்க தேவையில்லை எனவும், சுமார் 526 கோடி ரூபாயாக இருந்த விமானத்தின் விலை சுமார் 1600 கோடி எனவும், ஒப்பந்தத்தின் இடைத்தரகராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனமும் இணைக்கப்பட்டது பெரும் ஊழலை உறுதி செய்வதாகவும் அமைந்தது. இதையடுத்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணையில் மோடி தலைமையிலான அரசு முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் அளித்து வந்தது.


தற்போது தேர்தல் நடந்துவரும் நிலையில் வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்கும் வகையில் மத்திய அரசு வழக்கின் விசாரணையில் விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தது. இன்று நடந்த விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கின் விசாரணையை மே6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.