tamilnadu

img

எம்.பி. பதவிக்காகவே, ரபேல், அயோத்தி வழக்குகளில் தீர்ப்பா? உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம்

புதுதில்லி:
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காகவே, ரபேல், அயோத்தி வழக்குகளில் தீர்ப்பளித்தாரா? என்ற சந்தேகம்மக்களுக்கு இருப்பதாக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்சநீதிமன்றத்தில் அதிரடியான வாதத்தை முன் வைத்துள்ளார்.மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து, நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கில் ஆஜராகி வாதாடுகையிலேயே, வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். சமூக செயற்பாட்டாளரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கடந்த ஜூலை 27 அன்று தனது டுவிட்டர்பக்கத்தில், பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார். அதில், “வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அவசரநிலையும் பிறப்பிக்கப்படாமலேயே ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறிவார்கள். அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்சநீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதும், அதிலும் குறிப்பாக4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் (எஸ்.ஏ. பாப்டே, ரஞ்சன் கோகோய், தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கேஹர்..) பங்கும் தெரியவரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையொட்டி உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு மீதான விசாரணை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது.இதில், பிரசாந்த் பூஷண் சார்பில் உச்சநீதிமன்றத்தின் பிரபல மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். அப்போது அவர் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.“முக்கிய வழக்குகளில் அளிக்கப்பட்ட பல தீர்ப்புகள் நீதிக்கு எதிராக உள்ளதாக விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த தீர்ப்புகள் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட பல நீதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஞ்சன் கோகோய்- ரபேல், அயோத்தி, சிபிஐ அதிகாரம் குறித்த வழக்குகளின் தீர்ப்புக்களில் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தாக புகார் எழுந்தது. அதற்கேற்பவே, ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு ஆகியவை அளிக்க ப்பட்டு, அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்” - என்பதைச் சுட்டிக் காட்டிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இதன் மூலம், கோகோய் இந்த பதவியைப் பெற அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தாரா? என மக்கள் சந்தேகப்படுவதாகவும், “இவ்வாறு தீர்ப்புக்கள் குறித்து மக்களுக்கு சந்தேகம் வருவது நீதித்துறைக்குச் சரியாகுமா?” என்று கேள்விகளை எழுப்பினார்.

ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது, பதிலுக்கு அந்த ஊழியர் மீது எதிர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தற்போது அந்த குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டு, ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு இருப்பதையும் தவே நினைவுபடுத்தினார்.அதேபோல, “அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கே மட்டுமே ஒதுக்கப்படுவது ஏன்? உதாரணமாக நீதிபதி நாரிமனுக்கு ஏன் இவ்வித வழக்குகள் அளிக்கப்படுவதில்லை?” என்று கேட்டார்.அதற்கு அமர்வில் இருந்த நீதிபதி கவாய், “பல அரசியலமைப்பு அமர்வு வழக்குகளில் நாரிமன் இடம் பெற்றிருந்தார்” என பதிலளித்தார்.ஆனால், “தான் கேட்டது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறித்ததாகும்” என்றும், “இதுபோல் 50-க்கும் மேற்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைத் தன்னால் பட்டியலிட முடியும்” என்றும் தவே குறிப்பிட்டார்.

மேலும், “நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், பல வழக்குகளில் இந்திய நீதித்துறைக்கு பெரும் பங்காற்றி உள்ளார்; 2ஜி உரிமங்கள் ஒதுக்கீடு, நிலக்கரி தொகுதி ஒதுக்கீடு, காடுகளில் சுரங்கங்கள் அமைக்க அனுமதி போன்ற விவகாரங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்த நீதிமன்றம் அவர் செய்த பணிகளைப் பாராட்டியுள்ளது” என்பதையும் தவே சுட்டிக்காட்டினார்.தற்போது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.