புதுதில்லி:
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையைத் தராத சர்க்கரை ஆலை உரிமையாளர்களை, சிறைக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நினைவுபடுத்தியுள்ளார்.
மக்களவையில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது, இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ராம்விலாஸ் பஸ்வான் மேலும் கூறியிருப்பதாவது:
“2017-18ஆம் ஆண்டில், கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ. 85 ஆயிரத்து 179கோடியாக இருந்தது. இது கரும்பு அறுவடை முடியும் நேரத்தில் ரூ. 303 கோடியாக குறைந்துள்ளது. நடப்புப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகைரூ. 85 ஆயிரத்து 355 கோடியிலிருந்து, ரூ. 67 ஆயிரத்து 706 கோடியாக குறைந்துள்ளது. இதனடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நிலுவைத் தொகையே இருக்காது என்று கருதுகின்றோம்.அதேநேரம் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை முற்றிலும் தராவிட்டால், சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்பும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்பதை நினைவூட்டுகிறோம்”இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.