புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது என்று, முன்னாள் பாஜக தலைவரும், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான நடிகர் சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு, பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தது தொடர்பாகவே, சத்ருகன் சின்கா இவ்வாறு கிண்டலடித்துள்ளார்.
சத்ருகன் சின்கா மேலும் கூறியிருப்பதாவது:
“மோடியை ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் நான் பார்த்திருக்கிறேன். அவரால் எந்த ஒரு பேட்டியையும் ஒத்திகை இல்லாமல் கொடுக்க இயலாது. என்ன பேச வேண்டும் என்பதை எழுதிவைக்காமல் அவரால் பேசவும் இயலாது.
அப்படி முன்னேற்பாடுகள் இல்லாமல் ஒரு பேட்டியை மோடியிடம் எடுக்க எனக்கும் விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது சாத்தியமா? மோடி அதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
அக்ஷய் குமார் மோடியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி வருகிறார். அதற்கான ஆதாயங்களும் அவருக்கு இருக்கிறது. இந்த பேட்டியைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்.பிரதமராவதற்கு என்று தனிப்பட்ட குணநலன்கள் ஏதும் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். இவையெல்லாம் வெறும் எண் விளையாட்டு. உங்களுக்கும் எனக்கும் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்கூட நாம் பிரதமராகிவிட முடியும்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்திருந்தால் நாட்டின் பிரதமர் பதவியை வகிப்பது இன்னும் எளிது. அந்த வகையில் நிதிஷ் குமார், மாயாவதி, அகிலேஷ் யாதவுக்குக் கூட பிரதமராகும் தகுதி இருக்கிறது.
குஜராத் முதல்வராக இருந்த தகுதியைத் தவிர மோடிக்கு வேறென்ன பெரிய தகுதி பிரதமராவதற்கு வந்து விட்டது? என்னைப் போன்றோர் மோடி, மோடி, மோடி... என்று கோஷம் எழுப்பி அவரை நாடெங்கும் கொண்டு சேர்த்தோம். அரசியலில் எல்லாம் பார்த்துவிட்டேன். அரசியல் விளையாட்டு பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.”
இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.