tamilnadu

கல்வி நிலையங்களில் பாலியல் சீண்டல் கடும்  நடவடிக்கை  எடுக்க  மாணவர்  சங்கம்  வலியுறுத்தல்

புதுச்சேரி செப்.17- கல்வி நிலையங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியர் ஒருவர்  மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். மாணவிகளும் பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி கல்வித்துறை புகாருக்குள்ளான ஆசிரியரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. புதுச்சேரி காவல்துறை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது உரிய வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் செயலாளர் விண்ணரசன்  ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். மேலும், புதுச்சேரியில் உள்ள கல்வி வளாகங்களில் தொடர்ந்து மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் புகார்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் சீண்டலுக்கு எதிரான புகார் குழுக்களை அமைத்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வற்புறுத்துகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கல்வி வளாகங்களில்உரிய பாதுகாப்பு அளிப்பதை  புதுச்சேரி கல்வித்துறை உறுதி செய்ய வேணடும் என இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.