tamilnadu

img

அதிவேகமாக குறையும் கிராமப்புற நுகர்வு

புதுதில்லி:
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘நீல்சன்’ (Nidlsen) ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நுகர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையிலான அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. 
அதில், இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு, கிராமப்புற நுகர்வு அதிவேகமாக சரிந்திருப்பதாக ‘நீல்சன்’ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் தொழிற்துறைகள் மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், நுகர்வுப் பொருட்களின் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ‘நீல்சன்’ தெரிவித்துள்ளது.

குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மலிவுவிலை மிட்டாய்கள் போன்றவை அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களாக கருதப்படுகின்றன. விலை குறைவான இந்தப் பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகக் கூடியவை. அதிவேகமாக நுகரும், நுகர்வோர் பொருட்கள் விற்பனையில்- ஒட்டுமொத்த வளர்ச்சியில் 36 சதவிகிதம், கிராமப்புறங்களை நம்பியே உள்ளது.  ஆனால், கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த இந்த நுகர்வு வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு வெறும் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சி, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத மிகமோசமான அளவு என்று ‘நீல்சன்’ தெரிவிக்கிறது.