நாடாளுமன்ற தேர்தல், வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் கடந்த 10-ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை அடுத்து, தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
இந்நிலையில், கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டும், வாகனங்கள் சோதனைய இடப்பட்டும் வருகினறன. தனியார் கார், பஸ், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் நாடு முழுவதும் ரூ.143.37 கோடிக்கு ரொக்கப் பணம், ரூ.89.64 கோடி மதிப்பிலான மது, ரூ.131.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.162.93 கோடிக்கு தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பு உள்ள பொருட்கள், ரூ.12.20 கோடிக்கு இலவசப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட வகையில் ரூ.107.24 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக, உத்தரப் பிரதேசத்தில் ரூ.104.53 கோடியும், ஆந்திர மாநிலத்தில் ரூ.103.40 கோடியும், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.92.80 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் பொருட்கள், பணம் என மொத்தம் ரூ.26.53 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.19.11 கோடியும், தெலங்கானா மாநிலத்தில் ரூ.8.20 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.