புதுதில்லி:
தரமான சாலைகள் வேண்டுமானால் சுங்கக் கட்டணத்தை அவசியம் செலுத்தியாக வேண்டும்; சாலைகள் அமைப்பதற்கு, அரசாங்கத்திடம் என்ன, பணமா இருக்கிறது? என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை மீதான மானியகோரிக்கையில் வந்த விவாதங்களுக்குப் பதிலளித்து, நிதின் கட்காரி மேலும் பேசியிருப்பதாவது:“சுங்கச் சாவடிகளில் அதிகளவு பணம் வசூலிக்கப்படுவதாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சுங்கச் சாவடிகள் மூலம்வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். ஆனால் அவற்றை நிறுத்த முடியாது. உங்களுக்கு தரமான சாலைகள் வேண்டுமானால், அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திடம் பணம் இல்லை,என்பதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நாங்கள் நிறுத்தமுடியாது.”இவ்வாறு கட்காரி கூறியுள்ளார்.