புதுதில்லி:
விமர்சனங்களுக்கு எதிரான அடக்குமுறை ஒரு ஜனநாயக அரசுக்கு நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளகிங்க்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ‘இந்தியா டவுன் ஹால்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேசியுள்ளார். அப்போது, இந்தியப் பொருளாதாரம், அதன் மந்த நிலை மற்றும் வேலையின்மை குறித்து உரையாடியிருக்கும் ரகுராம் ராஜன், “விமர்சனங்களை அடக்கினால் பின்னூட்ட கருத்துக்களை கேட்க முடியாது” என்றும் “பின்னூட்ட கருத்துகளை கேட்காவிட்டால், தேவையான நேரத்தில் தவறுகளைசரி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் என கூறுவது அரசாங்கத்திற்கு நல்லது அல்ல” என்று கூறியுள்ள ரகுராம்ராஜன், “இந்தியாவில் அறிவுரை கூறுவதற்கு ஏராளமான பொருளாதார அறிஞர்கள் உள்ளனர்” என்றும் “அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு அரசாங்கம் செயல்பட வேண்டியது அவசியம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.பின்னோக்கிப் போகும் இந்தியப் பொருளாதாரம் குறித்த உண்மைகளைப் பேசும் பொருளியல் வல்லுநர்கள் மீது, பாஜக அரசுபழிவாங்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனை குறிப்பிடும் வகையிலேயே ரகுராம் ராஜன் மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.