tamilnadu

img

ரயில்வே துறை வருவாய் குறைந்தது... 10 ஆண்டுகளில் ஏற்படாத சரிவு

புதுதில்லி:
2017-18 நிதியாண்டில் ரயில்வேயின் வருவாய், முந்தைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பது, அம்பலமாகி இருக்கிறது.ரயில்வே நிதிநிலை தொடர்பாக, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General -CAG) நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

அதில், கடந்த 2016 - 2017 நிதியாண்டில் ரயில்வே நிர்வாகத்தின் கூடுதல் வருவாய் 4 ஆயிரத்து 913 கோடியாக இருந்தது. ஆனால், 2017 - 2018 நிதியாண்டில் அது ஆயிரத்து 665 கோடியாக குறைந்து விட்டது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத சரிவு என்றும் கூறியுள்ளார்.அதேபோல, கடந்த 2017 - 2018 நிதியாண்டில், 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு98 ரூபாய் 44 காசுகளை ரயில்வே செலவிட்டுள்ளதாகவும், தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) மற்றும் இர்கான் (IRCON) ஆகியவற்றிடமிருந்து பெற்றமுன்தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டதால், செலவு இந்த அளவோடு நின்றது; இல்லாவிட்டால் 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு 102 ரூபாயை ரயில்வே செலவு செய்ய வேண்டியதாகி இருக்கும் எனவும் சிஏஜி தெரிவித்துள்ளார்.பயணிகள் ரயில்களை இயக்குவதற்குத் தேவைப்படும் தொகை, சரக்கு ரயில்களை இயக்குவதன் மூலம் கிடைத்த 95 சதவிகித வருவாயில் இருந்தே பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த வருவாய் இழப்பு காரணமாக, மத்திய அரசின் பட்ஜெட்டையே ரயில்வே துறை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.