tamilnadu

img

மக்கள் இயக்கமான மாணவர் கிளர்ச்சி

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் நடத்திவரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் மக்களும் வந்து கலந்துகொண்டு அதனை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். புதுதில்லியில் தில்லிப் பல்கலைக் கழக கலை(Delhi University’s Arts Faculty) வளாகத்தில் வியாழன் அன்று நடைபெற்ற கிளர்ச்சிப்போராட்டத்தில் விடாது பெய்துகொண்டிருந்த மழையைப்பற்றியோ அல்லது மிகவும் அதிகமான அளவில் குவிக்கப்பட்டிருந்த போலீ
சாரைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் கிளர்ச்சிப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் முன்பு சமூகச் செயற்பாட்டாளர், மேதா பட்கர், துசார் காந்தி, ஓய்வு பெற்ற நீதிபதி கொல்சே பட்டீல், வழக்கறிஞர் கருணா நந்தி, இதழாளர் அர்ஃபா கான் ஷேர்வானி முதலானவர்கள் உரையாற்றினார்கள். உரைநிகழ்த்திய அனைவருமே மாணவர்களை வெகுவாகப் பாராட்டியதுடன், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான இப்போராட்டத்தின் மூலம் அவர்கள்இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்கள் என்றும் கூறினார்கள்.
நீதிபதி கொல்சே பட்டீல் உரையாற்றுகையில், உங்கள் இயக்கம் எதிர்கால இந்தியாவை வரையறுத்திடும்,” என்று கூறினார். பின்னர் அவர் பிரதமர், உள்துறை அமைச்சர், ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவாரங்கள்மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். மேலும் அவர், மாணவர்கள் கோல்வால்கரின் நூல்களையும், ரானா அயூப் எழுதியுள்ள “குஜராத் கோப்புகள்” ஆகியவற்றையும் அவசியம் படித்து, இவர்கள் குஜராத்தில் எவ்வாறு கலகங்களைஉருவாக்கினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் மாணவர்கள் சமூக அறிவியல் மற்றும் பொருளாதாரம் படிப்பதற்கும் முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்றும் கூறினார்.

உறுதியேற்பு
வழக்கறிஞர் கருணா நந்தி உரை நிகழ்த்துகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக்குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றில் ஒளிந்துள்ளஆபத்துக்களை விவரித்தார். இவை நாட்டிலுள்ள அனைத்து மக்களையுமே சங்கடத்திற்குள்ளாக்குபவை என்றும், அவர்கள் குறித்து முடிவே இல்லாத விசாரணைக்கு இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார். “நான் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், இப்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது என்னுடைய கடமை,” என்றும் கூறினார். பின்னர் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையை படித்து, உறுதி எடுத்துக்கொண்டார். திரண்டிருந்த மக்களும் உறுதி எடுத்துக்கொண்டார்கள்.

மேதா பட்கர் பேசுகையில், நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட  அக்கிரமங்களைப் பட்டியலிட்டார். உ.பி.யில் முசாபர்நகர் மக்கள் கிளர்ச்சிப் பேரணியில் பங்கேற்காதபோதிலும், போலீசார் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து வீடுகளைச் சூறையாடியதும், அங்கிருந்த மக்களை அடித்து நொறுக்கியதும் ஏன் என்றுவினா தொடுத்தார்.  மேலும் மாணவர்களைத் தாக்குவதற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும், ஜேஎன்யு-விலும் சீருடை அணியாத குண்டர்களும் அனுப்பப்பட்டிருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.  (ந.நி.)