புதுதில்லி
நாடாளுமன்றத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 12 அன்று நடைபெறு கிறது. இந்த தேர்தல் களத்தில் 311 கோடீஸ்வர வேட்பாளர்களும் குற்ற வழக்குடைய வேட்பாளர்கள் 189 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஆறாம் கட்டத் தேர்தலில் பீகாரில் 8 தொகுதிகளுக்கும், அரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கும், மத்தியப்பிரதேசத் தில் 8 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும் என மொத்தமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடை பெறுகிறது.
59 தொகுதிகளில் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் தேசிய கட்சிகளின் சார்பில் 174 வேட்பாளர்களும், மாநிலக் கட்சிகளின் சார்பில் 65 வேட்பாளர்களும், பதிவு செய்யப்படாத கட்சிகளின் சார்பில் 430 வேட்பாளர்களும், சுயேட்சைகளாக 310 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களில் 967 வேட்பாளர்களின் வேட்பு மனுவை ஜனநாயக சீர்திருத்த சங்கமும், நேசனல் எலெக்சன் வாட்ச் அமைப்பும் ஆய்வு செய்தன.அதில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், குற்றப் பின்னணிகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆறாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு வில் குற்ற வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 146 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் நான்கு பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ளனர். ஆறு பேர் மீது கொலை வழக்கு களும், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், ஐந்து பேர் மீது கடத்தல் வழக்குகளும், 21 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் தொடர் புடைய வழக்குகளும், 11 பேர் மீது வெறுப் புப் பேச்சு தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தங்களது வேட்புமனுவில் கூறியுள்ளனர்.
கட்சி ரீதியாக, பாஜக சார்பில் போட்டி யிடுகின்ற 54 வேட்பாளர்களில் 26 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற 46 பேரில் 20 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற 49 பேரில் 19 பேர் மீதும், சிவசேனா சார்பில் போட்டியிடுகின்ற 16 பேரில் 5 பேர் மீதும், சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற 307 பேரில் 34 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
311 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது வேட்பு மனு தக வல்கள் மூலம் தெரியவருகிறது. அதிகபட்சமாக பாஜக சார்பில் போட்டியிடுகின்ற 46 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற 37 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற 31 வேட்பாளர்களும்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டி யிடுகின்ற 6 வேட்பாளர்களும், சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற 71 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிற காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ரூ.374 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் சார்பில் கிழக்கு தில்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ரூ.147 கோடி சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மிகக் குறைவாக இந்திய சோசலிஷ ஒற்றுமை மையத்தின் சார்பில் மேற்கு வங்கத்தின் புரூலியா தொகுதியில் போட்டியிடும் ரங்கலால் குமார் 500 ரூபாய்க்கும் சற்று அதிகமாக இருப்பதாக வும், சிபிஐ -எம்.எல் சார்பில் மேற்கு வங்கத்தின் பங்குரா தொகுதியில் போட்டியிடும் சுக்சந்த் சரேன் 800 ரூபாய்க்கும் சற்று அதிகமான தொகை இருப்பதாகவும், அரியானா மாநிலத்தின் சோனிபட் தொகுதியில் போட்டியிடும் அஸ்வனி ரூ.1,700 இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.