தமிழகத்தில் வருகிற நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நவ 09, 10 மற்றும் 23, 24 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையில், தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)–க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.