புதுதில்லி:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.மாநிலங்களவை திங்கள் காலை கூடியதும் அருண்ஜேட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல மக்களவையிலும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் உள்ளிட்ட மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி முழக்கமிட்டனர். ஆளுங்கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிவசேனா உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி, வெளிநடப்பு செய்தனர். மகாராஷ்டிரத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதை இயற்கைப் பேரிடராக அறிவிக்கக் கோரி, சிவசேனா எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கூட்டத் தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் எனவும், தரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற அனைவரும் பங்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.