புதுதில்லி, மே 24 - அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு போலி வெண்டிலேட்டர்களை (சுவாசக் கருவிகள்) விநியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷசன் லிமிடெட் (Jyoti CNC Automation Ltd) ஆகும். ராஜ்கோட்டை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் நண்பரான, பராக்கிரம சிங் ஜடேஜா என்பவருக்குச் சொந்தமானதாகும். இந்த நிறுவனத்திடமிருந்து 900-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்களை, குஜராத் மாநில பாஜக அரசு வாங்கியது. ஆனால், இதனை சோதித்துப் பார்த்த அகமதாபாத் சிவில் மருத்துவமனை மயக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் ஷைலேஷ் ஷா உள்ளிட்ட மருத்துவர்கள், “அரசு வாங்கிக் கொடுத்தது வெண்டிலேட்டர்களே அல்ல; அவை போலி; நோயாளிகளுக்கு இதனை வைத்து சிகிச்சை அளிக்க முடியாது” என்று கூறிவிட்டனர்.
இது சர்ச்சையான நிலையில், “தாங்கள் தயாரித்துக் கொடுத்தது வெண்டிலேட்டர் அல்ல என்பதை முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் விற்பனை செய்தோம்” என்று ஜோதி சிஎன்சி நிறுவனம் அதிர்ச்சி அளித்தது. அப்படியானால் தரமற்றவை என்று தெரிந்துதான், குஜராத் மாநில பாஜக அரசும், முதல்வர் விஜய் ரூபானியும் ஜோதி சிஎன்சி வெண்டிலேட்டர்களை வாங்கினார்களா? என்று எதிர்க் கட்சிகள் கேள்விகள் எழுப்பவே, “இவற்றை வெண்டிலேட்டர்கள் என்று நாங்கள் எப்போது கூறினோம்..?” என்று குஜராத் அரசும் தந்திரமாக தப்பிக்க முயன்றது. ஆனால், அரசின் அறிக்கைகளில், “ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனத்தின் மலிவுவிலை வெண்டிலேட்டர் ‘தமன்-1’ (Dhaman-1) ஒரு மாபெரும் சாதனை; இதன்மூலம் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டக் கனவு நனவாகி இருக்கிறது” என்று முதல்வர் ரூபானி புகழ்ந்தது துவங்கி, மொத்தம் 9 இடங்களில் ‘வெண்டிலேட்டர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
இதற்கிடையேதான், பிபிசி செய்தியாளர் ஒருவர், டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தனது அண்ணி அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இறந்துபோனார் என்றும், அவருக்கு வைக்கப்பட்டது ‘தமன்-1’ போலி வெண்டிலேட்டரா? என்றும் சந்தேகம் கிளப்பினார். இந்த சந்தேகம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அகமதாபாத் சிவில் மருத்துவனையில், ஒருவரல்ல, இருவரல்ல 300 பேர் வரை இறந்துள்ள நிலையில், அவர்களுக்கு தமன்-1 வெண்டிலேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனெனில் தரமற்ற 900 தமன்-1 வெண்டிலேட்டர்களில்- 230 வெண்டிலேட்டர்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மட்டும் நிறுவப்பட்டிருக்கின்றன என்பதுதான் அதற்குக் காரணம். இதையடுத்து, போலி வெண்டிலேட்டர்களால் நிகழ்ந்துள்ள மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளன.