அரசியல் சாசன அமர்வு முக்கிய தீர்ப்பு
புதுதில்லி,நவ.13- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலு வலகமும் வரும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு புதனன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று 2010 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர்அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ.) வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தீர்ப்பளித்து, தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. 5 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்துவதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆா்டிஐ ஆா்வலா் எஸ்.சி.அகா்வால் தரப்பில் வழக்கறிஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடுகையில், அரசின் அமைப்புகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தனது விஷயத்திலும் அதே கவனத்தை செலுத்துவதிலிருந்து விலக இயலாது. நீதித்துறையின் சுதந்திரம் என்பது பொதுமக்களின் கண்காணி ப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் என்று அா்த்தமாகிவிடாது. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆா்டிஐ சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.