ரூர்க்கி
இந்தியாவிலும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ள கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் 10 பேரை காவு வாங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், 500 -க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலிருந்து தப்பிக்க முக்கிய தடுப்பு ஆயுதமாக இருப்பது சானிடைசர்கள் என அழைக்கப்படும் ஹேண்ட்வாஷ் மற்றும் முககவசம் எனப்படும் மாஸ்க் மட்டும் தான். தற்போதைய சூழ்நிலையில் இந்த இரண்டு பொருட்களும் அதிகளவு விற்பனை ஆகிவரும் நிலையில், உத்தரகாண்டில் உள்ள ரூர்க்கி ஐஐடி-யைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் புதுவகை ஹேண்ட்வாஷை தயாரித்து அசத்தியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி தயாரிக்கப்பட்ட, இந்த ஹேண்ட்வாஷில் 80 சதவிகித ஐசோபுரபனோல், எத்தனால் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை, காளான் உள்ளிட்ட எதிர்ப்பு மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த புதுவகை ஹேண்ட்வாஷை உத்தரகாண்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்து இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கும்படிக் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.