புதுதில்லி:
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு விதமான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். பீகாரில் கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று, ஆட்சியையும் கைப்பற்றியது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திடீரென ஆர்ஜேடி உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், மீண்டும் பாஜக-வுடன் கை கோர்த்துக் கொண்டார். ஆர்ஜேடி-க்கு வழங்கப்பட்டிருந்த துணை முதல்வர் பதவியை, பாஜக-வுக்கு வழங்கிய அவர், இரண்டு கூட்டணியிலும் முதல்வர் பதவியை தன்னிடமே வைத்துக்கொண்டார்.இந்நிலையில், 2020 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக-வை கூட்டணியிலிருந்து கழற்றிவிட நிதிஷ் குமார் ஆயத்தமாகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மக்களவைத் தேர்தலின்போதே, இரண்டு கட்சிகளுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டதால், சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வை கழற்றி விடுவதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு நிதிஷ் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கேற்பவே, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை, பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், வியாழனன்று பாட்னா சாலை ஒன்றுக்கு நேருவின் பெயர் நிதிஷ் குமார் சூட்டியுள்ளார். இதனை, பாஜக-வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்பதற்கான நிதிஷ் குமார் சமிக்ஞை என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.