லக்னோ
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு தம்பதியினர், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, "கொரோனா", "லாக் டவுன்" என பெயர்சூட்டியுள்ளனர்.
உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் குகூண்டு (மென்மையான) அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிறன்று தம்பதியர் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல் குழந்தையின் தந்த பவனிற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்ததுவமனைக்கு விரைந்து சென்ற பவன் பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்தக் குழந்தைக்கு "லாக் டவுன்" என பெயர் சூட்டியுள்ளார். இதை ஆரம்ப சுகாதார நிலையப் பொறுப்பாளர் ஆர்.பி.திரிபாதி உறுதிப்படுத்தியுள்ளார். தாயும்-சேயும் புதன்கிழமை காலை வீடு திரும்பினர்.
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் சோஹரா கிராமத்தில் கடந்த வாரம் பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ராகினியின் சகோதரர் நித்திஷ் திரிபாதி "கொரோனோ" என பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து நித்திஷ் திரிபாதி கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக அனைவரும் இருப்பதால், எனது சகோதரியிடம் அனுமதி பெற்று கொரோனா என பெயரிட்டேன் என்றார்.