பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க உள்ளதாத மோடி அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு 25 ஆயிரத்து 509 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி 20 முதல் 25 கோடி ரூபாய் வரை ஏர் இந்தியா இழப்புடன் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் நோக்கில் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவுக்கு இருக்கும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட இதர சுமைகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பும் சேர்ந்து வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வணிக முயற்சி தேசவிரோதம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் நீதிமன்றம் செல்வேன் என தெரிவித்துள்ளார்.