சென்னை:
பிரபல தென்னிந்திய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்த படம் தர்பார். கடந்த மாதம் ரிலீஸானது.
ஹிட் நாயகனாக வலம் வரும் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கியதால் படம் வெளியாகும் முன்பு பல விஷயங்கள் மூலம் தர்பார் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் அந்த பரபரப்பு எல்லாம் படம் வெளியாகிய சில நாட்களில் கானல் நீரைப்போன்று காணாமல் போனது. தொடக்க ஒரு வாரத்தில் தனது ரசிகர்கள் மூலம் வழக்கமான வசூலை (ரூ.150 கோடி) குவித்த தர்பார் அடுத்த சில நாட்களில் மந்தமாக மயங்கியது. அதாவது திரையரங்கம் வானம் இல்லா நட்சத்திரம் போலக் காட்சியளிக்க விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வசூலும் சரிவர வராததால் விநியோகஸ்தர்கள் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் முறையிட்டனர். ஆனால் லைகா நிறுவனம் எங்களுக்கே நஷ்டம் என்று தெரிவிக்க, விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் நஷ்டஈடு கேட்க கடந்த 30-ஆம் தேதி அலுவலகத்திற்கு சென்றார்கள். எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தர்பார் பட விநியோகஸ்தர்கள் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு நோக்கி சென்றார்கள். இதை பார்த்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்த,"வீட்டிற்கு வந்தால் ராகவேந்திரா மண்டபத்திற்குச் செல்லுமாறு கூறுகிறார்கள். அங்குச் சென்றால் ஒருவரையும் காணோம். எங்களை வைத்து ரஜினி விளையாடுகிறாரா என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.தர்பார் படத்தால் தங்களுக்கு 30 சதவீதம் நஷ்டம் என்று விநியோகஸ்தர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் முக்கிய நடிகரான ரஜினிகாந்த வீட்டை விநியோகஸ்தர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.