tamilnadu

img

மோட்டார் வாகன உற்பத்தி : தீவிரமடையும் வேலையிழப்பு

மோட்டார் வாகன உற்பத்தி அதிகம் நடக்கும் தமிழ்நாடு ‘இந்தியாவின் டெட்ராய்டு’ என்று அமெரிக்க கார் உற்பத்தி நகரான டெட்ராய்டுக்கு இணையாக பேசப்பட்டது. இன்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தெருவில் நிற்கிறார்கள். நொய்டா, குர்கான், புனே, பெங்களூரு என எங்கெல்லாம் இந்த தொழிற்சாலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆலைகள் மூடப்படுகின்றன. டிவிஎஸ், அசோக் லேலண்ட், மகிந்திரா போன்ற  நிறுவனங்கள் வாரத்துக்கு இரண்டுநாளும் அதற்கு மேலும் மூடப்படுகின்றன. கார்களும் இருசக்கர வாகனங்களும் உதிரி பாகங்களும் கிடங்குகளில் நிரம்பி வழிகின்றன. ஏன், வாகனங்களை வாங்குவதில்லை என்று மக்கள் முடிவு செய்து விட்டார்களா? அல்லது இத்தகைய வாகனங்கள் தேவைப்படாத அளவுக்கு பேருந்துகளும் மெட்ரோ போன்ற இதர ரயில்களும் நீர்வழி போக்குவரத்து என பொதுப் போக்குவரத்தும் சிறப்பாகி விட்டதா?. 

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். கார், இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்கள் இவர்கள் தான். அவனுக்கு வேலை போனால் வாகன விற்பனை இல்லை. சிவகாசியில் பட்டாசு தொழில் கடும் நெருக்கடியை சந்தித்தது. உணவுக்கு கூட வழி இல்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பட்டாசு தொழிலாளர்கள் குடிபெயர்ந்துவிட்டார்கள்.தீப்பெட்டி, முந்திரி, ரப்பர் என தென்பகுதியிலும் மேற்கே திருப்பூர், கோவையில்  பனியன் துணி உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. இப்படி வேலை இழப்பும் வருமான வீழ்ச்சியும் ஏற்பட்டால் எல்லா பொருட்களும் தேங்கும், விற்காது. இது வெறும் பொருளாதாரம் அல்ல. அரசியலாய் பார்த்தால்தான் இது புரியும். இந்த பொருளாதாரத்துக்கு பின்னால் இருக்கும் கொள்கையையும் அதில் உள்ள அரசியலையும் பார்க்கத் தவறினால், அரசியல் பொருளாதாரம் என்று கம்யூனிஸ்டுகள் சொல்வதைப்போல் பார்க்கத் தவறினால் எந்த உண்மையும் உங்களுக்கு விளங்காது. 
இந்த மக்கள் வேலை உள்ளவர்களாய் வருமானம் உள்ளவர்களாய் சோறு போக வேறு பொருட்கள் வாங்கும் வக்குள்ளவர்களாக ஆக்கப்படாமல் எந்த பொருளும் விற்காது.