tamilnadu

img

தொழிலாளர்களை தவிக்க விடும் மோடியின் ‘ஷ்ராமிக்’ ரயில்கள்....

புதுதில்லி:
கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கியது.

அதன்படி, ஷ்ராமிக் எனும் சிறப்பு ரயில்கள் மே 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3000 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்திருப்பதாகவும், அடுத்த 10 நாட்களில் மேலும் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக கூடுதலாக 2600 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு செல்லும் ஷ்ராமிக் ரயில்கள், போக வேண்டிய மாநிலத்தைவிட்டு வேறு எங்கெங்கோ சென்று தொழிலாளர்களை அலைக்கழிக்கும் கொடுமை தொடர் அவலமாக மாறியிருக்கிறது.அண்மையில் சூரத்தில் இருந்து பீகார் செல்லவேண்டிய ஷ்ராமிக் ரயில், ஒடிசா மாநிலத்திற்கு சென்று விட்டது. இதேபோல பீகார் மாநிலம் பாட்னா செல்ல வேண்டிய இரண்டு ஷ்ராமிக் ரயில்கள் மேற்குவங்க மாநிலத்துக்கும், கயாவுக்கும் சென்று விட்டன. 

இந்த சம்பவங்கள் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின. எந்தத் திட்டமும் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனினும் ரயில்வே நிர்வாகம் திருந்துவதாக இல்லை.குஜராத்திலிருந்து பீகார் செல்ல வேண்டிய மற்றொரு புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில், தற்போது கர்நாடகத்திற்கு சென்றுள்ளது.ஷ்ராமிக் ரயில்கள் பாதை மாறி சென்றதை உத்தரப்பிரதேச ரயில்வே வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த ஷ்ராமிக் ரயில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாதை மாறி, அலகாபாத் வழியாக வடக்கு நோக்கி செல்வதற்கு பதிலாக, பெங்களூருவுக்கு தெற்கு நோக்கி சென்று விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சொந்த ஊர் திரும்பிவிட மாட்டோமா, மனைவி, குழந்தைகளை எப்போதுதான் பார்க்கப் போகிறோம் என்று சுமார் 2 மாதங்களாக ஏங்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஷ்ராமிக் ரயில்களில் மிகுந்த ஆர்வத்துடன் இடம்பிடித்தனர். ஆனால், ஈவிரக்கமற்ற மோடி அரசால், அவர்களின் சோகம் ஊருக்கு ரயில் ஏறியும் விடியவில்லை.