புது தில்லி,நவ.13- மாணவர்களின் தொடர் போராட்டத்தால் தில்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வில் ஒரு பகுதியை குறைப்பதாக அறிவித்துள்ளது. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் உயர்த்தப் பட்ட கல்விக்கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமையன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் 40 சதவீதம் பேர் ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். இந்த கல்விக் கட்டண உயர்வால் அவர்களால் எவ்வாறு தங்கள் மேற்படிப்பை தொடர முடியும்? எனவே கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை சந்தித்துப் பேசினர். இதை தொடர்ந்து தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் புதன்கிழமையன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டண உயர்வை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் கட்டண உயர்வு வாபஸ் என்பது பித்தலாட்டமான ஒன்று, கட்டண உயர்வு முழுமையாக திரும்பபெறும்வரை போராட்டம் தொடரும் என மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது