புதுதில்லி:
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவியும், பிஞ்ச்ரா தோட் அமைப்பின் செயற்பாட்டாளருமான தேவங்கனா கலிதா மீது நான்காவதாக மீண்டும்ஒரு வழக்கை தில்லிக் காவல்துறையினர் பதிவு செய்திருக்கின்றனர்.இந்தமுறை வடகிழக்கு தில்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் மிகக் கொடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் பிரிவுகளுடன் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை, கொலை செய்ய முயற்சி, தேசத்துரோகம், கிரிமினல் சதி, சமூகத்தினருக்கிடையே மதம்,இனம், பிறப்பிடம் முதலானவற்றைப் பயன்படுத்தி பகைமையை விளைவித்தல் முதலான பிரிவுகளின் கீழும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கின்றனர்.
கலிதா தற்போது வேறொரு வழக்கின்கீழ் சிறையில் இருக்கிறார். இப்போது அவர்மீது நான்காவதாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய வழக்குகளில் நீதிமன்றம்அவரைப் பிணையில் விடுவித்ததைத் தொடர்ந்து இப்போது நான்காவதாக வழக்கு தொடுத்து, கைது செய்திருக்கிறது.இதேபோன்று பிஞ்ச்ரா தோட்அமைப்பின் மற்றொரு உறுப்பினரான நடாஷா நர்வால் என்னும்ஜேஎன்யு மாணவியும் சட்டவிரோதநடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கபில் சிபல் குற்றச்சாட்டு
தில்லி காவல்துறை, வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற மதக் கலவரங்களில் “துரோகிகளைச் சுடுங்கள்”என்று மதக்கலவரத்தைத் தூண்டியகயவர்களைப் பாதுகாத்திடும் அதே சமயத்தில், மாணவர்களுக்கு எதிராகப் பொய்யாக வழக்குகளைத் தாக்கல் செய்துகொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும்கூறுகையில், “பல்கலைக் கழகங்களில் படிக்கின்ற மாணவர்கள், நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று தங்கள் இதயங்களில் நல்ல சிந்தனைகளை ஏந்தியிருப்போர், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கத் துணிந்திடும்போது, அவர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து, அவர்களிடம் “நீங்கள் இந்த அரசாங்கத்தைஆதரித்திட வேண்டும், இல்லையேல் உங்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் பாயும்,” என்று போலீசார் மிரட்டியுள்ளனர். இவ்வாறு போலீசார்ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு வருகின்றனர்,” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “உண்மையிலேயே வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதற்காக, போலீசார், வன்முறைச் சம்பவங்களைப் பதிவு செய்த கேமராக்களை உடைத்தது எங்களுக்குத் தெரியும்,” என்றும் கபில் சிபல் கூறியுள்ளார். (ந.நி.)