tamilnadu

img

மருத்துவர் கபீல் கானை கைது செய்தது சட்டவிரோதம்... அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்:
கோரக்பூர் டாக்டர் கபீல் கானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது சட்ட விரோதம் என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் உ.பி. பாஜக அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர்பிஆர்டி மருத்துவ மனையில், கடந்த2017-ஆம் ஆண்டு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தனர். அப்போது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல் கான்.ஆனால், உத்தரப்பிரதேச பாஜக அரசு, கபீல்கான் மீதே குழந்தைகள் இறப்புக்கான பழியைத் தூக்கிப் போட்டு, அவரை சிறையில் அடைத்தது.பின்னர் விசாரணையில் கபீல் கான் குற்றமற்றவர் என்பது நிரூபணமானது.

எனினும் உத்தரப்பிரதேச பாஜக அரசு, கபீல்கானை விடுவதாக இல்லை.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, 2019 டிசம்பர் 13-ஆம்தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில், டாக்டர் கபீல் கான் இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும்விதமாக பேசினார் என்று கூறி, சட்டப்பிரிவு 153ஏ-இன் கீழ் வழக்கு பதிவு செய்தது.அத்துடன், கடந்த ஜனவரி 29 அன்றுகபீல் கானை மும்பையில் கைது செய்தஉ.பி. காவல்துறை, அவரை மதுரா சிறையில் அடைத்தது.இந்த வழக்கில் கபீல்கானுக்கு அலிகார் நீதிமன்றம் பிப்ரவரி 10-ஆம் தேதிஜாமீன் வழங்கியது. ஆனாலும், அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்யாத ஆதித்யநாத் அரசு, பிப்ரவரி13 அன்று கபீல்கான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபோட்டு, மீண்டும் சிறையில் அடைத்தது.

கான் மீது தொடக்கத்தில் ஐபிசி 153ஏ பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஐபிசி 153பி மற்றும் 505(2)ஆகியவை சேர்க்கப்பட்டன. இதனால் டாக்டர் கபீல்கான் கடந்த 7 மாதமாக மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனிடையே கபீல்கானின் தாயார்நுஷ்ரத் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்குவது பற்றி 15 நாட்களில் முடிவெடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால், அவ்வாறு உத்தரவிட்ட நேரத்திலும் கூட, ஆகஸ்ட் 5 அன்று கபீல்கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து வன்மத்துடன் உ.பி. பாஜக அரசு நடந்து கொண்டது.இதனிடையே, கபீல் கானின் தாயார்நுஷ்ரத் கான் தாக்கல் செய்திருந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், கோவிந்த் மாத்தூர், சவுமித்ரா தயாள் சிங் ஆகியோர் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “டாக்டர் கபீல்கான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதம். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.“டாக்டர் கபீல்கான் பேசியதாக கூறப்பட்ட விஷயங்கள் குறித்த ஆவணங்களைப் பார்த்தோம். அலிகார் மாவட்ட ஆட்சியர், கபீல்கான் பேச்சில் சில விஷயங்களை மட்டும் கோடிட்டு காட்டுகிறார். முழுப் பேச்சும் வெளிப்படுத்தும் உண்மையான நோக்கத்தை புறக்கணித்து உரையின் சில சொற்றொடர்களைத் தேர்வு செய்து காண்பித்ததுபோல் தெரிகிறது. மற்றபடி கபீல் கான் பேச்சில் வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, வெறுப்பை விதைக்கும் விதத்திலோ எதுவும் இல்லை. அலிகார் நகரின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவரின் பேச்சு அமையவில்லை” என்றுநீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.