புதுதில்லி:
அமைச்சரவைக்குழு நியமன விவகாரத்தில், பாஜக மூத்தத் தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் புறக்கணிப்பட்டது, பெரும் சர்ச்சைiயை ஏற்படுத்தியது.
மொத்தமுள்ள 8 அமைச்சரவைக் குழுக்களில் 2 அமைச்சரவைக் குழுக்களில் மட்டுமே ராஜ்நாத் சிங்கிற்கு இடம் வழங்கப்பட்டது. அதேநேரம் மோடிக்கு நெருக்கமான அமித்ஷாவுக்கு 8 குழுக்களிலும் இடம் வழங்கப்பட்டது.
இது, ராஜ்நாத் சிங்கை அதிருப்தியில் தள்ளியது. அவர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்ய முடிவுசெய்து விட்டதாக தகவல்களும் வெளியாகின. இது பாஜக-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதனால், வியாழனன்று இரவே தனது முடிவிலிருந்து பின்வாங்கிய மோடி அரசு, அமைச்சரவைக் குழுக்களில் சில மாற்றங்களைச் செய்து, மேலும் 4 குழுக்களில் ராஜ்நாத் சிங் பெயரைச் சேர்த்தது.
முன்பு, கேபினட் கமிட்டி மற்றும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கமிட்டியில் மட்டுமே ராஜ்நாத் சிங்கிற்கு இடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரகள், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு உள்ளிட்ட அமைச்சரவைக் குழுக்களிலும் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அமித்ஷாவுக்கு 8 அமைச்சரவைக் குழுக்களில் இடம் ஒதுக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை.