புதுதில்லி:
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம், மாநில அரசு அதன்அதிகாரத்துக்குட்பட்டு இட ஒதுக்கீடு, சலுகைகள் வழங்குவதில் மருத்துவக்கவுன்சில் தலையிட அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப் புறங்களில், எளிதில் அணுகமுடியாத தொலைதூர பகுதிகளில், மலைப் பகுதிகளில்பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவசேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.மிகவும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு இந்த முறையினை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தனியார் மருத்துவர்களுக்கும் அரசு மருத்துவர்களுக்கு இடையே இது பிரிவினையையும் பாகுபாட்டையும் ஊக்குவிப்பதாக கூறி தனியார்மருத்துவர்கள், தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம்உள்ளிட்ட பல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசுக்கு அதிகாரம்
முன்னதாக இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்ட நிலையில் இத்தகைய சிறப்பு மதிப்பெண்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருதா போஸ் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விரிவாக நடைபெற்றது.மனுதாரர்கள் மற்றும் மருத்துவக் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பில் இத்தகைய சிறப்பு சலுகைகளை எல்லாம் மாநில அரசுகள் வழங்க அதிகாரம் கிடையாது, இது மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு எதிரானது. மேலும் நீட் தேர்வு மட்டுமே மருத்துவ சேர்க்கைக்கானது. அதில் எந்த சலுகையும், இடஒதுக்கீடும் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.அதேவேளையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சேகர் நாப்டே, யோகேஷ் கண்ணா ஆகியோர் இது மாநில அரசின் அதிகாரம் சார்ந்த விஷயம் என்றும், மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இடஒதுக்கீடு உரிமையில் இத்தகைய சிறப்பு சலுகைகளை நலன் சார்ந்து வழங்க வழிவகை உள்ளது என்றும், மேலும் கடினமான பகுதிகளில் சேவை செய்யும் அரசு மருத்துவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவது கடினமான ஒன்று என்றும்எனவே அவர்களுக்கு இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது என்றும் வாதங்களை முன்வைத்தனர்.இதனையடுத்து உச்சநீதிமன்றம், சேவை செய்யும்மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடை மாநிலங்கள் வழங்குவதை ஏன் எதிர்க்கின்றீர்கள் ? என மருத்துவக் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியது. அத்துடன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்திருந்தது.
மருத்துவக் கவுன்சில் தடைசெய்ய முடியாது
இதனையடுத்து திங்களன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “சர்வீஸ் மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. இன் சர்வீஸ் மருத்துவர்களுக்கு உரிய விதிமுறைப்படி மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம்.இன்சர்வீஸ் மருத்துவர்களுக்கு (கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள்) மருத்துவமுதுநிலை படிப்பில் மாநில அரசுகள் இடஒதுக்கீட்டு வழங்குவதை மருத்துவக் கவுன்சிலின் சட்டம் தடை செய்யமுடியாது. மாநில அரசுகள் அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டு இன் சர்வீஸ் மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்கலாம்.இன்சர்வீஸ் மருத்துவர்கள் 5 ஆண்டு கிராமப்புறத்தில், தொலைதூரப் பகுதியில், மலைப் பகுதியில்பணி புரிய வேண்டும். இன் சர்வீஸ் மருத்துவர்கள் கிராமப்புறம், தொலைதூரப் பகுதியில் சேவை செய்ய, பணியாற்ற 5 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்.இந்த விவகாரங்களில் மாநில அரசுகள் தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது.