புதுதில்லி:
எல்ஐசி நிறுவனம் கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவிப்பதாக,கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. எல்ஐசி அதன் ஏராளமான சொத்துக்களை கடன் காரணமாக இழந்துவிட்டதாகவும், கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தன.இது பாலிசிதாரர்கள் மத்தியில் எல்ஐசியின் நம்பகத்தன்மை குறித்த ஐயத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இது எல்ஐசி-யின் புதிய பிரிமியம் வசூலில் எதிரொலித்ததாகவும்; 0.41 சதவிகிதம் பிரிமியம் வசூல் குறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், எல்ஐசி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எல்ஐசி நிறுவனத்தின் நிதிநிலை பலவீனமாக உள்ளது; இதனால்,பாலிசிதாரர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் வரவேண்டிய தொகை கிடைக்காதுஎன்பது முழுக்க முழுக்க வதந்தி ஆகும்;எல்ஐசி-யின் நற்பெயரைக் கெடுக்கக் கிளப்பிவிடப்பட்டது ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதுபோன்ற தவறான வதந்திகளைநாங்கள் மறுக்கிறோம், அதன் பாலிசிதாரர்களுக்கு அதன் நல்ல நிதி ஆரோக்கியம் குறித்து உறுதியளிக்க விரும்புகிறோம். மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பாலிசிதாரர்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.2018-19 ஆம் ஆண்டில், எல்.ஐ.சி. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச போனசாக ரூ. 50 ஆயிரம் கோடியை, பாலிசிதாரர்களுக்கு அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 31 வரை, சந்தைப் பங்கு பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 72.84 சதவிகிதமாகவும், முதல் ஆண்டு பிரீமியத்தைப் பொறுத்தவரை இது 73.06 சதவிகிதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.முதலாண்டு பிரீமியத்தில் எல்.ஐ.சியின் சந்தைப் பங்கு 2019 மார்ச் மாதத்தில்66.24 சதவிகிதத்திலிருந்து 2019 ஆகஸ்டில் 73.06 சதவிகிதமாக உயர்ந்துள்ளது”இவ்வாறு எல்ஐசி கூறியுள்ளது.