திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரியில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையின் பின் பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 35 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், மோப்ப நாய்கள் உதவியுடனும், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் கொள்ளையர்களை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளையில் முகமுடி அணிந்து வந்த நபர்கள் ஈடுபட்டுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.