tamilnadu

img

கொள்ளையடிக்கப்பட்ட லலிதா ஜூவல்லரி நகைகள் மீட்பு

திருச்சி:
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையன் முருகன் திருடிய நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2 ஆம் தேதியன்று 13 கோடி ரூபாய்மதிப்பிலான தங்கம் மற்றும்வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் சிலர் கைது செய்யப்பட்டனர். பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த கொள்ளையில் மூளையாகச் செயல்பட்ட முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான். முருகன் மீது ஏற்கெனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தொடர்பாக முருகனை காவலில் எடுத்து கர்நாடக  மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் முருகனை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்த கர்நாடக போலீசார், திருச்சி மற்றும் பெரம்பலூரில் முருகன் சொன்ன இடங்களில் எல்லாம் சோதனை நடத்தி நகைகளை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக போலீசாரின் காரை, வாலிகண்டபுரம் என்ற இடத்தில் வைத்து பெரம்பலூர் போலீசார் மறித்தனர். பறிமுதல் செய்த நகைகள் மற்றும் முருகனோடு, கர்நாடக போலீசாரை, எளம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்திற்கு பெரம்பலூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.அங்கு வைத்து நகைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளைய டிக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நகைகளை எடை போடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.