புதுதில்லி:
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தனியார்மய பொருளாதாரக் கொள்கையை, மிகத் தீவிரமாக கையில் எடுத்துள்ளது.கடனில் இருக்கும் ‘ஏர் இந்தியா’ போன்ற நிறுவனங்களை மட்டுமல்லாது, பல ஆயிரம் கோடி ரூபாய் லாபமீட்டி வரும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ரயில்வே, எல்ஐசி போன்ற காப்பீட்டு நிறுவனங்களையும் தனியாருக்கு விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அந்த வகையில், லாபத்தில் இயங்கி வரும், பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited- BPCL) நிறுவனத்தில் மத்திய அரசுக்குள்ள 52.98 சதவிகித பங்குகளை விற்க ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.“பிபிசிஎல் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பப் படிவங்களை, முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மைத்துறையிடம் பெற்றுக்கொள்ளலாம் (DIPAM) என்றும், மேலும், விலைப்புள்ளிகளை மே 2-ஆம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்”என்றும் அறிவிக்கை செய்துள்ளது.பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் (பிபிசிஎல்) நிறுவனமானது, மும்பை (மகாராஷ்டிரா), கொச்சி (கேரளா), பினா (மத்தியப் பிரதேசம்) மற்றும் நுமலிகர் (அசாம்) ஆகிய இடங்களில் நான்கு சுத்திகரிப்பு நிலையங்களை ஆண்டுக்கு 38.3 மில்லியன் டன் கொள்ளளவுடன் இயக்கி வருகிறது. இந்தியாவின் மொத்த சுத்திகரிப்பு திறனான 249.4 மில்லியன் டன்களில், இது 15 சதவிகிதமாகும்.இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் 15 சதவிகிதத்தையும், எரிபொருள் சந்தையில் நான்கில் ஒரு பங்கையும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் நிறுவனம் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும், 15 ஆயிரத்து 177 பெட்ரோல் பம்புகள் மற்றும் 6 ஆயிரத்து 11 எல்பிஜி விநியோகஸ்தர் ஏஜென்சிகளையும் பிபிசிஎல் நிறுவனம் கொண்டிருக்கிறது. தவிர, 51 எல்பிஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) ஆலைகளையும் நிர்வகிக்கிறது.
2020 மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் நுகரப்படும் பெட்ரோலியப் பொருட்களில் 21 சதவிகிதத்தை பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் நிறுவனம்தான் விநியோகிக்கிறது. நாட்டின் 250 விமான எரிபொருள் நிலையங்களிலும், ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கிறது.
பிபிசிஎல் அதன் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சந்தை வணிகத்திலிருந்து, 2019-20 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ரூ. 2 ஆயிரத்து 246 கோடியே 88 லட்சத்தை, வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 51 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த 2018-19 நிதியாண்டில் ஈட்டப்பட்ட ரூ. 698 கோடியே 62 லட்சம் என்ற நிகர லாபத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் சுமார் 87 ஆயிரத்து 388 கோடி ரூபாயாகும். இதில், அரசாங்கத்தின் பங்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய். இதைத்தான் தனியாருக்கு கைமாற்றிவிடும் வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளது.
“மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள தனது 114.91 கோடி பங்குகளை, அதாவது 52.98 சதவிகித பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது” என்று கூறியிருப்பதுடன், “பங்குகளை வாங்குவோருக்கு, பிபிசிஎல்- நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் முழுமையாக வழங்கப்படும்” என்றும் தனியாரிடம் சரணாகதி அடைந்துள்ளது.