புதுதில்லி:
உலக அளவில் ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.லைம் லைட் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆய்வில், இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 8 மணிநேரம் 33 நிமிடங்கள் ஆன்லைன் வீடியோவுக்காக செலவழிப்பது தெரியவந்துள்ளது. இது உலக அளவில் சராசரியாக 6 மணிநேரம் 48 நிமிடங்கள் என்ற அளவைவிட 1 மணிநேரம் 45 நிமிடங்கள் அதிகம் ஆகும். கடந்த ஆண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது.ஆன்லைன் வீடியோக்களை இந்தியர்கள் வீட்டிலேயே அதிகமாகப் பார்க்கின்றனர். ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் பிரத்யேக உபகரணங்களை (கூகுள் குரோம்காஸ்ட், அமேசான் பயர் டிவி ஸ்டிக்) போன்றவற்றை வாங்குவதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வீடியோக்களைக் காண இந்தியர்கள் முதலாவதாக தேர்ந்தெடுப்பது ஸ்மார்ட்போன்தான். பிரபல டிவி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றனர். அதன் பின்னர் செய்திகள், திரைப்படங்கள், பிரத்யேகமாக சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்படும் வீடியோ ஆகியவற்றை காண்பதாக ஆய்வில் தெரியவருகிறது.