பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, 2014-ஆம் ஆண்டு மோடி தனது சுதந்திர தின உரையில், அறிவித்த திட்டம்தான், குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாமல் வங்கிக் கணக்குத் துவங்கும், ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டமாகும். ஆகஸ்ட் 28-ஆம் தேதி, அதிகாரப் பூர்வமாக இத்திட்டத்தை மோடி நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். கிராமப்புறத்தில் உள்ள சாதாரண ஏழை- எளிய மக்கள்கூட வங்கி சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும்என்பதற்காக, இத்திட்டத்தை கடுமையான ஆராய்ச்சிகள் நடத்தி கண்டுபிடித்ததாக மோடி அப்போது கூறினார். உண்மையில் மோடி கண்டுபிடித்த திட்டம் அல்ல. அடிப்படை வங்கிச் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ் (Basic Savings Bank Deposit Account) குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை 2005-ஆம் ஆண்டே ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி விட்டது. ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட அந்தத் திட்டத்தைத்தான், 9 ஆண்டுகளுக்குப் பின், பெயிண்ட் அடித்து, ‘பிரதம மந்திரிஜன் தன் யோஜனா’ என்று பெயர்சூட்டி மோடி அறிவித்தார். இது பிரதமரின் முதல் மோசடி. ஆனால், ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, சேமிப்புக் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டாதவர்கள், ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’விற்கு ஆர்வம் காட்டினார்களே ஏன்? என்றால், அதுஉண்மைதான். ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை என்பதோடு, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படும் என்று மோடி கூறினார்.
இந்த விபத்துக் காப்பீடும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்ததுதான் என்றாலும், அதற்கு 100 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதை மோடி இலவசமாக்கினார். அத்துடன், ‘ஜன்தன் யோஜனா’ கணக்கு ஆரம்பித்து,6 மாத காலம் உரியப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளர் களுக்கு 5,000 ரூபாய் மிகைப்பற்று அளிக்கப்படும் என்றும், மோடி கூறியது, மக்களை மயக்கியது. இதனால் வங்கிகளில் குவிந்தார்கள். நாடு முழுவதும் ஜன் தன் திட் டத்தின் கீழ் சுமார் 35 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த கணக்குகளின் செயல்பாடு என்ன? என்றால், வங்கி அதிகாரிகள் ஒன்றுமில்லை என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். சுமார் 25 கோடியே 60 லட்சம் ஜன் தன் கணக்குகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகளில் ஐந்தில் ஒரு வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இல்லை என்றும், ஓராண்டிற்கும் மேல் பரிவர்த்தனை இல்லாமல் இருந்த 92 லட்சத்து 52 ஆயிரத்து 609 ஜன் தன் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டு விட்டதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.“ஜன் தன் கணக்குகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் மிகைப்பற்று வாங்கிய பலரும் அதைத் திரும்பச் செலுத்தவே இல்லை. மேலும் பிரதமரின் முத்ராகடன் திட்டத்தைப் பற்றிக் கேள்விப் பட்டவர்கள், ஜன் தன் யோஜனா கணக்கைப் புதுப்பித்து, கடன்பெற முயற்சி செய்தனர். பின்னர் அவர்களும் அப்படியே விட்டுள்ளனர். மறுபுறத்தில் பயன்படுத்தாத கணக்குகளைப் பராமரிக்கும் செலவுகள் வங்கிகளின் தலையில் விழுந்து விட்டன” என்று வங்கி அதிகாரிகள் புலம்புகின்றனர். அப்படியானால் ‘ஜன் தன் யோஜனா’வால் மக்களுக்கு என்ன லாபம்? என்றால்
மக்களுக்கு எந்த லாபமும் இல்லை;
மோடியின் முதலாளி நண்பர்களுக்குத் தான் லாபம் என்கிறார்கள். ஜன்தன் கணக்குகள் மூலம் சுமார் 94 ஆயிரத்து 617 கோடி ரூபாயை, வைப்புத்தொகையாக மோடி அரசு மக்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும், அந்த பணம்தான் மோடியின் முதலாளி நண்பர்களுக்கு கடனாகச் சென்று அவர்களை அகமகிழச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். மக்கள் ஏன்தான் ‘ஜன் தன் யோஜனா’
மீது இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள்? என்ற கேள்விக்கும் வங்கி அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார். “அனைத்து சலுகைகளும் ஜன்தன் கணக்குகள் மூலமே வரப்போகின் றன என்று மோடி கூறியவுடன் வேறுவங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தவர்களே; ஜன் தன் திட்டத்தின் கீழும் பல வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கினர்; குறிப்பாக, ‘கறுப்புப் பணத்தை மீட்டு பிரதமர் மோடி தருவதாக கூறிய ரூ. 15 லட்சம் பணமும்... ஜன் தன் கணக்குகள் மூலம்தான் வரப்போகிறது’ என்று அவர்கள் நம்பியது தான் காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மக்களை நம்ப வைத்து ஏமாற்றியதற்கு, ‘பிரதம மந்திரிஜன் தன் யோஜனா’வே ஒரு சாட்சியென்றால் அது மிகையல்ல.