tamilnadu

img

அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதே இந்திய நாடு!

புதுதில்லி:
இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்று, இந்துத்துவா அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கூறிவரும் நிலையில், இந்தியா அனைத்து மதத்தினருக்குமே பொதுவான நாடு என்று பெரும்பான்மை இந்துக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம்’ என்ற அமைப்பு, கருத்துக் கணிப்பு ஒன்றை, அண்மையில் நடத்தியுள்ளது. இன்றைய அரசியல் சூழலில், சமூகவலைத்தளங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு, மக்களிடம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில்தான், பெரும்பான்மை இந்துக்களின் எண்ணவோட்டமும் படம்பிடிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, சமூகவலைத்தளத்தைப் பயன்படுத்தாத இந்துக்களில் 73 சதவிகிதம் பேரும், சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தும் இந்துக்களில் 75 சதவிகிதம் பேரும், இந்தியா அனைத்து மதத்தினருக்கும் பொதுவான நாடு என்று கருத்துக் கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளத்தைப் பயன்படுத்தாத 17 சதவிகிதம் இந்துக்களும், சமூகவலைத்தளத்தைப் பயன்படுத்துவோரில் 19 சதவிகித இந்துக்களும் மட்டுமே, இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.