tamilnadu

img

உங்கள் உடல் நடுங்கியதல்லவா.. அந்த பயம்தான் வேண்டும்... பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா வெறிப்பேச்சு

புதுதில்லி:
‘ஷாகீன் பாக்-கில் போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று நான்கு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியிருந்தார். இதேபோல, ‘மசூதிகளை இடித்துத் தள்ள வேண்டும்’ என்று பர்வேஷ் வர்மாவும், ‘ஷாகீன் போராட்டக்காரர்கள் பாலியல் குற்றவாளிகள்’ என்று கபில்மிஸ்ராவும் வெறியைத் தூண்டியிருந்தனர். இதுதொடர்பான புகாரில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு தடையும் விதித்தது. 

இந்தப் பின்னணியில்தான், தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் ‘சிஏஏ’-விற்கு எதிராக அமைதியான முறையில் நடத்திக் கொண்டிருந்த போராட்டத்தில், ராம்பக்த் கோபால் என்ற இந்துத்துவா பயங்கரவாதி திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நாடு முழுவதும் அதி ர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.அனுராக் தாக்குர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகிய 3 பேரையும் கைதுசெய்ய வேண்டும் என்று ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள், காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் தங்களைப் பார்த்துபயப்படுவதை வரவேற்பதாகவும், அவர்களுக்கு எங்கள் மீது எப்போதுமே இந்தப் பயம் இருக்க வேண்டும் என்றும் கபில் மிஸ்ரா மீண்டும் வெறியைத் தூண்டியுள்ளார்.“நீங்கள் இப்படித்தான் பயப்பட வேண்டும். அரசை துண்டிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டும்; உங்களின் வயிறு எரிவதை எங்களால் பார்க்க முடிகிறது” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கபில் மிஸ்ராவின் இந்த வெறிப்பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.