மனித உரிமை செயற்பாட்டாளர் ஹர்ஷ்மந்தர் நேர்காணல்
2019 ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நிறைவேற்றி இருக்கின்றன. நாடு தழுவிய அளவில் குடிமக்கள் தேசிய பதிவேட்டைச் செயல்படுத்தி, அதன் மூலம் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்கான முன்னோடியாக இந்த குடியுரிமை (திருத்தம்) மசோதா இருக்கலாம் என்றே அரசியல் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோதமாக புலம் பெயர்ந்த முஸ்லீம் அல்லாதோர் இந்த குடியுரிமை (திருத்தம்) மசோதா மூலம் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்ப தால், முஸ்லீம்களை மட்டுமே இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுகின்ற வகையில் பாதிப்பை ஏர்படுத்துவதாகவே அது இருக்கப் போகின்றது. டிசம்பர் 10 அன்று மக்களவையில் மசோதாவை நிறைவேற்றப்பட்ட பிறகு, மனித உரிமை ஆர்வலரான ஹர்ஷ் மந்தர் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
“குடியுரிமை (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டால், என்னுடைய சட்ட மறுப்பாக, அதிகாரப்பூர்வமாக நான் முஸ்லீமாக என்னைப் பதிவு செய்து கொண்டு, குடிமக்கள் தேசிய பதிவேட்டிற்காக எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க மறுப்பேன். இறுதியாக ஆவணமற்ற எந்தவொரு முஸ்லீமைப் போன்றும் தடுப்புக்காவல் மையத்திற்குச் சென்று, அவர்களுக்கு வழங்கப்படும் அதே தண்டனையாக என்னுடைய குடியுரிமையை திரும்பக் பெற்றுக் கொள்வதை நான் கோருவேன். இந்த சட்ட மறுப்பில் அனைவரும் சேருங்கள்” என்று அவர் அந்தப் பதிவில் எழுதியிருந்தார். இந்த அறிவிப்பு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவராக இருக்கின்ற அபிமன்யு சந்திரா, புதுதில்லியில் ஹர்ஷ்மந்தரை சந்தித்தார். ஹர்ஷ் மந்தருடனான அந்த நேர்காணலை ‘தி கேரவான்’ ஏடு வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:
அபிமன்யு சந்திரா: சட்ட மறுப்பு என்ற உங்களின் கருத்து எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் தீர்க்க முயற்சிக்கின்ற பிரச்சனைக்கு அது ஒரு தீர்வாக இருக்குமா?
ஹர்ஷ் மந்தர்: எதிர்த்து நிற்பதற்காக நாம் செய்யக்கூடிய ஒரே விஷயமாக ஒத்துழை யாமை வடிவங்களைப் பின்பற்றுவதே இருக் கும் என்றே நான் கருதுகிறேன். சட்டம் அநியாய மானதாக இருந்தால், அதை முதலில் பகிரங்க மாக உடைத்தெறிய வேண்டும். அதற்கான விளைவுகளை ஏற்றுக் கொள்வது என்றில்லா மல், அதற்கான தண்டனையைப் பெறுகின்ற வகையில் விளைவுகளை நாமே கோரிப் பெற வேண்டும் என்பதே மகாத்மா காந்தி நமக்கு கற்பித்துச் சென்றிருக்கும் விஷயம் ஆகும். ஆகவே, “விளைவுகளுக்குத் தயாராக நான் இருக்கிறேன்” என்று சொல்வது மட்டும் போதாது. “உங்கள் சட்டத்தை நான் பகிரங்க மாக மீறியிருக்கிறேன். ஒன்று நீங்கள் அந்தச் சட்டத்தை கைவிட வேண்டும் அல்லது என்னைத் தண்டிக்க வேண்டும். உங்களால் என்னைத் தண்டிக்கவும் முடியாது, சட்டத்தை கைவிடவும் முடியாது” என்று அரசிடம் சொல்ல வேண்டும். இத்தகைய சட்டகத்திற்குள்தான் போராட்டம் நடக்க வேண்டும்.
மக்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்பு கின்ற குடிமக்கள் தேசிய பதிவேட்டைப் புறக்க ணிப்பதன் விளைவுகள் முஸ்லீம் மக்களுக்கு மட்டுமே பொருந்துவதாகவே இருப்பதுதான் இங்குள்ள பிரச்சனையாக உள்ளது. குடி மக்கள் தேசிய பதிவேட்டிற்கான ஆவணங்களை அனைவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும், நீங்கள் முஸ்லீமாக இல்லாவிட்டால் உங்க ளால் ஆவணங்களைத் தர இயலாவிட்டாலும், உங்கள் குடியுரிமைக்கு எந்தவிதத்திலும் மோச மான விளைவுகள் ஏற்பட்டு விடாது என்று அனை வருக்கும் உறுதியளிக்கப்படுகிறது. ஆக இந்தப் பதிவேடு என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமே யான குடிமக்கள் தேசிய பதிவேடாகவே இருக்கப் போகிறது. இந்த நிலைமையில், முஸ்லீம் சமூகத்திற் குள் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற வர்களால் அந்த ஆவணங்களைத் திரட்ட முடி யும் என்றால், அவர்கள் அவற்றைத் தயா ரித்துக் கொடுத்தால், அது ஏறக்குறைய தன்ன லத்திற்காக தங்களுடைய வறிய, படிக்காத தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்த முஸ்லீம் சகோ தர சகோதரிகளுக்கு துரோகம் விளைவிப்ப தாகவே இருக்கும். ஏனென்றால், அந்த ஏழை களால் இந்த ஆவணங்களைத் தயாரித்து அளிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரி யும். எனவேதான் குடிமக்கள் தேசிய பதி வேட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன். நான் சொல்வதெல்லாம், குடியுரிமை குறித்த உரிமைகளைப் பெறுவதற்கோ அல்லது மறுப்பதற்கோ உங்கள் மதம் என்பது முக்கி யம் என்றாகின்ற அதிகாரப்பூர்வ சூழலில், முஸ்லீமாக இருப்பதனால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்றுக் கொள்வதற்காக அதிகா ரப்பூர்வமாக என்னை நான் முஸ்லீமாகப் பதிவு செய்து கொள்வேன் என்பதுதான். என் நாட்டில் உள்ள முஸ்லீம்களைப் போல, அந்த குடிமக்கள் தேசிய பதிவேட்டை நான் புறக்கணிப்பேன். அதற்கான எந்த ஆவணங்களையும் தயாரித்து அளிக்க மாட்டேன். அதாவது அவர்களின் வரை யறைப்படி நான் சட்டவிரோதமாக குடியேறி யவராக இருப்பேன். எனது நாட்டில் முஸ்லீம் ஒருவர் எதிர்கொள்ளும் இயலாமை மற்றும் சிரமங்கள், தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பப்படுவது அல்லது அவரது குடியு ரிமை உரிமைகளைப் பறிப்பது போன்ற தண்ட னைகள் எனக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றே நான் கோருகிறேன் - இது சட்டத்தை மறுக்கின்ற செயலே ஆகும்.
பலரும் இதில் உங்களுடன் சேருவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
ஹர்ஷ் மந்தர்: அது நடக்கும் என்று நான் நம்பு கிறேன். முன்பிருந்ததை விட மோடிக்கு அதிக அளவில் இடங்கள் கிடைத்திருந்த போதிலும், பெற்றிருக்கும் வாக்குகளைப் பொறுத்த வரை அவருக்கு 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு களே கிடைத்துள்ளன. அறுபது சதவிகித இந்தி யர்கள், அதாவது இந்துக்களில் பெரும்பான்மை யானவர்கள் அவரின் நிலைப்பாட்டை ஆதரிக்க வில்லை என்பது தெரிகிறது. மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல், இறுதி யில் நமது எதிரிகளின் வார்த்தைகளைவிட நமது நண்பர்களின் மவுனங்களையே நாம் நினை வில் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய தீமைகளை வடிவமைப்பதற்கு இந்து பெரும்பான்மையினரின் மவுனங்களே உதவி வருகின்றன. இந்த மவுனத்தையே நாம் இணைந்து கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
இந்த மவுனத்திற்கு மூன்று காரணங்கள் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவற்றில் முதலாவது, பேசுவதற்கு மக்கள் பயப்படுவதாக இருக்கலாம். இரண்டாவதாக, “நான் முஸ்லீம் அல்ல என்பதால் எனக்கு எது வும் நடக்காது. அதனால் எனக்கு கவலை யில்லை” என்ற போக்கு இருக்கலாம். மூன்றாவ தாக அதே வெறுப்பு மற்றும் தவறான உணர்வு கள் எனக்குள்ளும் இருப்பது காரணமாக இருக்கலாம். எனது இந்து சகோதர சகோதரிகளிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் என்ன வென்றால், இந்த மூன்று காரணங்களில் எது அவர்களிடம் இருக்கின்ற மவுனத்திற்கான கார ணம் என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும். இந்த மூன்று காரணங்களில் ஏதாவது ஒன்று தான் அதற்கான காரணம் என்று கண்டறிந்தால், அந்த காரணத்தை அவர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா அல்லது அவர் களின் மனசாட்சி அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியிருக்கிறதா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
மக்களின் மனசாட்சி அவர்களைக் குத்துகின்ற இடத்தை நாம் நெருங்கி விட்டோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
குடியுரிமை (திருத்த) மசோதா உடைத்தெ றிந்திருப்பது சுதந்திரப் போராட்டத்தின், அரசி யலமைப்பின் மைய விழுமியங்களை மட்டு மல்ல என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது. உண்மையில் உடைத்தெறியப்பட்டிருப்பது வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் அடையா ளங்களைச் சார்ந்த மக்களை ஆதரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் நமது நாகரிக மரபு தான். இந்த நெருக்கடியான தருணத்தில் நமது பழைய நாகரிக மரபு நிச்சயம் தன்னை உறுதிப் படுத்திக் கொள்ளும். குடியுரிமை (திருத்த) மசோதாவின் ஆதரவாளர்களிடையே, முஸ்லீம்களுக்கி டையே உள்ள உள் பன்முகத்தன்மை ஏன் மறக்கப்படுகிறது? அஹ்மதிகள், ஷியாக்கள் என்று அனைவரும் ஓரியல்பான முஸ்லீம்களின் ஒரு பகுதியாக இருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள்.
இது ஒரு பெரிய பிரச்சினை. தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் நம்மில் தம்மை தாராள வாதிகள் என்று கருதிக் கொள்பவர்கள்கூட, பெரும்பாலும் தங்களுடைய மனதில் முஸ்லீம் சமூகத்தை ஓரியல்பாக்கம் செய்து கொள்கிறார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதி பதி பாரக் ஒபாமா தான் முஸ்லீம் உலகத்திடம் உரையாற்றப் போவதாகக் கூறிய போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவ்வாறு சொல் வது விசித்திரமாக இருந்தது. அவர் யாரைப் பற்றி பேசினார்? உதாரணமாக, “கிறிஸ்தவ உல கம்” என்று நீங்கள் ஒருபோதும் பேச மாட்டீர் கள். தங்களை கிறிஸ்தவர்களாகக் கருதும் மக்க ளிடையே இருப்பது போன்று, உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்ற முஸ் லிம் மக்களிடையேயும் வேறுபாடுகள் இருக்கின் றன. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போன்றோர் மீது விப்ரோவின் முன்னாள் தலைவரான அஸிம் பிரேம்ஜிக்கு இருக்கின்ற கருத்தும், தர்கா ஒன்றில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் ஃபக்கீர் மீது இருக்கும் கருத்தும் ஒன்றாக இருக்குமா? இனவாத கண்ணோட்டத்தைப் பொறுத்த வரை நாரா யண மூர்த்தியை விட அந்த ஃபக்கீரிடமே பொது வான ஆர்வம் அவரிடம் இருப்பதைக் காண முடி யும். அடையாளங்களின் அத்தகைய கலவை யாகவே நாம் அனைவருமே இருக்கின்றோம். இந்த அடையாளங்களில் ஒன்றிற்கு மட்டுமே முன்னுரிமை தருவதன் மூலம் வகுப்புவாத, அர சியல் அணிதிரட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஏதாவது பதில்களை உங்களு டைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பி னர்கள் கூறினார்களா? சட்ட மறுப்பைப் பொறுத்தவரை இது எடுத்து வைக்கப்பட்டி ருக்கின்ற மிகப் பெரிய அடியாகும். எனது குடும்பம் எப்போதும் எனக்கு உறு துணையாகவே இருந்து வருகிறது. அவர்கள் அனைவரும் விளைவுகளை உணர்ந்திருக்கி றார்கள். பின்விளைவுகள் இல்லாமல் எதிர்க்க முடிந்தால், நாங்கள் அனைவரும் அதைச் செய்வோம். நான் அதனை எதிர்கொள்ளத் தயா ராகவே இருக்கிறேன்.
தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு
நன்றி : கேரவான் இதழ், 2019 டிசம்பர் 12