tamilnadu

img

நான் பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவன்.. மனித நேயத்திற்கு தடை ஏற்படும் இடங்களில் எல்லாம் எழுந்து நிற்பேன்

புதுதில்லி:
தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள் ளிட்டோர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், கடந்த ஞாயிறன்று பாபர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், பாஜக வேட்பாளரை ஆதரித்து, அமித்ஷா பேசிக் கொண்டிருந்தபோது, ஹர்ஜித் சிங் என்ற20 வயது இளைஞர், “சிஏஏ வாபாஸ்லோ” என்று திடீரென முழக்கங் களை எழுப்பி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் இளைஞர் ஹர்ஜித் சிங் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் ஹர்ஜித் சிங்-கின் முகம், முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டன.அங்கிருந்த போலீசார், ஹர்ஜித் சிங்கை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், காவல்நிலைய லாக்-அப்பில் அடைத்து,பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று எழுதித்தருமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.இந்நிலையில் ஹர்ஜித் சிங் பேட்டிஒன்றை அளித்துள்ளார். அதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை வெளிக் காட்டியாக வேண்டும் என்ற முடிவோடுதான் அமித்ஷாவின் கூட்டத்திற்கு சென்றதாகவும், எங்கெல் லாம் மனிதநேயத்திற்கு தடைஏற்படுகிறதோ அங்கே எழுந்து நிற்பது; பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட தன்னுடைய கடமை என்றும் ஹர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தில்அரசாங்கம் மதங்களைக் குறிப்பிடக்கூடாது, மாறாக சிறுபான்மையினர் என்று பொதுவாக கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இளைஞர் ஹர்ஜித் சிங், தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்த நிலை பள்ளியில் அரசியல் அறிவியல் பிரிவில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.